சென்னை: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காமல் இந்திய அரசு புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தீர்மானத்தை உருவாக்கின. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை பொறுப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பின்போது, உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளில் தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா உட்பட 20 நாடுகளும், எதிராக சீனா, பாகிஸ்தான் உட்பட 7 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா, ஜப்பான் உட்பட 20 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதையடுத்து, தீர்மானம் நிறைவேறியது.
இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கை:
2012 முதல் 2021 வரை 7 முறை நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டங்களில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்துள்ளது. கடந்த கால காங்கிரஸ் அரசு கையாண்ட நடைமுறையையே பாஜக அரசும் பின்பற்றுகிறது. தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதில் இரு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இலங்கை அரசை திருப்திப்படுத்த இலங்கை தமிழர்களை இந்திய அரசு கைவிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.