ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் விஏகே நகர் பகுதியில் வசித்தவர் வெற்றிவேல்(42) ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது, மனைவி ரேவதி(32). இவர்களுக்கு, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6ம் தேதி அதிகாலை வீட்டில் வெற்றிவேல் மயங்கி கிடந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிந்து ரேவதியிடம் விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ரேவதி மற்றும் அவரது கள்ளக்காதலனான ஆரணி அடுத்த காமக்கூர்ப்பாளையம் நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த 2016ல் வெற்றிவேலின் புதுவீடு கட்டும் பணியை அவரது தங்கை கணவர் நாகராஜ் செய்துள்ளார். அப்போது, அவருக்கும் ரேவதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. வெற்றிவேல் கண்டித்தும் அவர்கள் தொடர்பு நீடித்தது. இந்நிலையில், கடந்தாண்டு வெற்றிவேல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று குடும்பத்துடன் வசித்துள்ளார். கடந்த மே மாதம் கள்ளக்காதலை கைவிடும்படி ரேவதியை அடித்துள்ளார். இதையடுத்து ரேவதியின் உறவினர்கள் வீடு புகுந்து அவரை தாக்கினர். அதன்பின். ரேவதி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
கடந்த 4ம் தேதி பைக் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெற்றிவேலை ரேவதி சந்தித்து, தான் திருந்தி விட்டதாக கூறினார். சிகிச்சை முடிந்து, 5ம் தேதி வெற்றிவேலை வீட்டிற்கு அழைத்து வந்தனர். பின்னர், அவருக்கு ேரவதி மருந்துடன் தூக்க மாத்திரை கொடுத்துள்ளார். நள்ளிரவில் கள்ளக்காதலன் நாகராஜ், பாஜ பிரமுகர் ராஜேஷ், ரேவதி ஆகிய 3 பேர் சேர்ந்து, வெற்றிவேலை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். மறுநாள் கணவர் மயக்க நிலையில் இருப்பதாக அவரது உறவினர்களுக்கு தெரிவித்தார். அவர்கள் ஆரணி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதுதான் இறந்தது தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கொலை வழக்கில் தொடர்புடைய பாஜ பிரமுகர் ராஜேஷ் வேலூர் ஜேஎம் 4 கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.