புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி இ-ரூபாய் பணத்தை பரிட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவின் மத்திய வங்கியானது CBDCயை சட்டப்பூர்வ டெண்டர் என்று வரையறுத்துள்ளது, இது டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் பணமாகும். இது ரூபாய்த் தாளைப் போன்றே இறையாண்மைத்தன்மை கொண்ட பணமாகும். ஆனால் வேறு வடிவத்தில், தற்போதுள்ள நாணயத்திற்கு இணையாக மாற்றக்கூடியது. இதன் மூலம் பணம் செலுத்துதல் சட்டபூர்வமானது. பண மதிப்பின் சேமிப்பகமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2022, அக்டோபர் ஏழாம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (CBDC) என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தியது. இது, குறிப்பிட்ட சில பரிமாற்றங்களில் ஈ-ரூபாயாக பயன்படுத்தலாம் என்றும், இது தொடர்பான மேலதிக தகவல்களும் விவரங்களும் பின்னர் வெளியிடப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
பொதுவாக இந்த வகை நாணயம் மற்றும் டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாயின் திட்டமிடப்பட்ட அம்சங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த கருத்துக் குறிப்பு வெளியிடப்பட்டது.
“இந்த கான்செப்ட் நோட்டின் வெளிப்பாட்டின் நோக்கம் பொதுவாக CBDC கள் மற்றும் டிஜிட்டல் ரூபாயின் (e₹) திட்டமிடப்பட்ட அம்சங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இது இந்தியாவில் CBDC ஐ வழங்குவதன் நோக்கங்கள், தேர்வுகள், நன்மைகள் மற்றும் அபாயங்களை விளக்குகிறது. CBDC அறிமுகம் தொடர்பான ரிசர்வ் வங்கியின் அணுகுமுறையை விளக்கவும் குறிப்பு முயல்கிறது,” என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
CBDCயை சட்டப்பூர்வ டெண்டர் என்று பொதுவாக வரையறுத்துள்ள மத்திய வங்கி, “தற்போது கிடைக்கும் பண வடிவங்களுக்கு இந்த மின்-ரூபாய் கூடுதல் விருப்பத்தை வழங்கும். இது ரூபாய் நோட்டுகளிலிருந்து பெரிய அளவில் வேறுபட்டதல்ல, ஆனால் டிஜிட்டல் முறையில் இருப்பதால் எளிதாகவும் வேகமாகவும் பயன்படுத்தலாம். பிற டிஜிட்டல் பணத்தின் அனைத்து பரிவர்த்தனை நன்மைகளையும் இ-ரூபாய் கொண்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
இதுபோன்ற பைலட் முயற்சிகள் விரிவடையும் போது, ரிசர்வ் வங்கி அதன் குறிப்பிட்ட அம்சங்கள் மற்றும் நன்மைகளை அவ்வப்போது தெரிவிக்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டில் ரூபாய்க்கு இணையான டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிடும் என்று தெரிவித்திருந்தார்.
“CBDC, ஒரு இறையாண்மை நாணயமாக இருப்பதால், மத்திய வங்கி பணத்தின் தனித்துவமான நன்மைகளை கொண்டுள்ளது. நம்பிக்கை, பாதுகாப்பு, பணப்புழக்கம், தீர்வு இறுதி மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றைக் கொண்ட டிஜிட்டல் கரன்சி இது” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் ரூபாய் முறையானது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, நிதிச் சேர்க்கைக்கு பங்களிக்கும் அதே வேளையில் பணவியல் மற்றும் கட்டண முறைகளை மிகவும் திறமையானதாக்கும் என்றும் ரிசர்வ் வங்கி நம்புகிறது.
ரிசர்வ் வங்கி CBDC இல் ஆஃப்லைன் அம்சத்தைப் பயன்படுத்துவது தொலைதூர இடங்களில் உள்ளவர்களுக்கு உதவுவதோடு, மின்சாரம் அல்லது மொபைல் நெட்வொர்க் இல்லாத நேரங்களில் பலனளிக்கும் அதே வேளையில், அதிக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சீனா, கானா, ஜமைக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நாடுகள் உட்பட பல நாடுகளும் சமீபத்தில் தங்கள் டிஜிட்டல் நாணயங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. 2019 ஆம் ஆண்டில், பஹாமாஸில் அச்சிடப்பட்ட டிஜிட்டல் நாணயமான Sand Dollar, உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் CBDC ஆகும்.