திருவாரூர்: திருவாரூர் அருகே திருவாசல் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (29). இவரது மனைவி மாரியம்மாள் (26). இவர், 5 மாத கர்ப்பமாக உள்ளார். அவருக்கு, 5ம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு சாதங்களுடன் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் உணவருந்திய சிறிது நேரத்தில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதில் வேலுக்குடி கிராமத்தை சேர்ந்த பிஎஸ்என்எல் மோடம் நெட்வொர்க் ஒப்பந்த நிறுவன மேலாளர் செல்வமுருகன் (24), இவரது அண்ணன் செல்வகணபதி (25), அதே ஊரை சேர்ந்த சந்துரு (10) உட்பட 11 பேர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி செல்வமுருகன் பரிதாபமாக இறந்தார். மற்ற 10 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.
நிகழ்ச்சி நடைபெற்ற திருவாசலில் முகாமிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், பரிமாறப்பட்ட உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். உணவு ஒவ்வாமை காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தியதில், மாரியம்மாள் வீட்டில் கலவை சாதம் சமைத்து எடுத்து வந்ததாகவும், திருவாரூர் வாழவாய்க்கால் அருகே ஒரு கடையில் பிரியாணி ஆர்டர் செய்து பெறப்பட்டது என்றும் தெரிய வந்தது.