சி.வி.எம்.பி.எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க
“யார் எதைச் சொல்வது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. செல்லூர் ராஜூ ஓர் உலகறிந்த விஞ்ஞானி, மதுரையின் மாபெரும் பொழுதுபோக்கு. அவர் இப்படி வாய்க்கு வந்த எதையாவது உளறிக்கொண்டுதான் இருப்பார். தி.மு.க அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பது, நிகழ்ச்சிகளில் பேசுவதெல்லாம் கலைஞர் காலத்திலிருந்து தொடரும் வழக்கம். ஆனால், அ.தி.மு.க-வில் அப்படி இல்லாமல், ஜெயலலிதா அம்மையாருக்கு அமைச்சர்களெல்லாம் அடிமைப்பட்டு இருந்தார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், அவரின் மறைவுக்குப் பிறகுதான் ஜெயலலிதா ஏன் யாரையும் பேச அனுமதிக்கவில்லை என்பது அனைவருக்கும் புரிந்தது. `மம்மிக்காக வாழ்ந்தோம், இப்போது டாடிக்காக வாழ்கிறோம்’ என்று பேசும் அளவுக்குத்தான் அ.தி.மு.க அமைச்சர்களின் அறிவு இருக்கும். அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பொதுவெளியில் பேசிய எத்தனையோ அ.தி.மு.க அமைச்சர்களை நாம் பார்த்திருக்கிறோம். தி.மு.க-வின் ஆட்சி மக்கள் கொண்டாடும் வகையில் நடந்துகொண்டிருப்பதை அ.தி.மு.க-வினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அமைச்சர்கள் பேச்சுவழக்கில் பேசிய ஏதாவது ஒரு வார்த்தையைவைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அ.தி.மு.க என்ற கட்சி இருக்கிறதா, இல்லையா என்ற சூழலில் தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்ள அ.தி.மு.க-வினர் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க-வின் மீது விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.’’
எஸ்.ரவி, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க
“உண்மையைச் சொல்லியிருக்கிறார். தி.மு.க அமைச்சர்கள், தங்களை வாக்களித்து வெற்றிபெறவைத்த மக்களை வாய்க்குவந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொச்சைப்படுத்திப் பேசிக்கொண்டிருக் கிறார்கள். முதல்வர் ஸ்டாலின், `சர்வாதிகாரியாக மாறுவேன், கடுமையான நடவடிக்கை எடுப்பேன்’ என்று வார்த்தைகளில் மட்டும் சொல்லிக்கொண்டே யிருக்கிறார். இதுவரை, தவறாகப் பேசிய ஓர் அமைச்சர் மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா… அமைச்சர்கள் மட்டுமல்ல, உள்ளாட்சிப் பிரதிநிதிகள்கூட முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை. தி.மு.க-வினர் வெளிப்படையாகவே லஞ்சம் கேட்டு மிரட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த லட்சணத்தில், அ.தி.மு.க குறித்து தி.மு.க-வினர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்குத் திறப்புவிழா நடத்துவதைத் தவிர, இவர்கள் சொந்தமாக எந்தத் திட்டத்தையாவது கொண்டுவந்திருக்கிறார்களா… மத்திய அரசிடமிருந்தும் எந்தத் திட்டத்தையும் கேட்டுப் பெறவில்லை. வெறும் விளம்பர ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. ஸ்டாலின் பொம்மை முதல்வராக இருக்க, அவரின் குடும்ப உறுப்பினர்கள்தான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களின் குடும்பத்தைத் தாண்டி தமிழ்நாட்டில் யாருக்கும், எந்த நன்மையும் ஏற்படவில்லை. தி.மு.க-வுக்கு வாக்களித்த மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்தக் கோபத்தின் வெளிப்பாடு வரும் தேர்தலில் எதிரொலிக்கும்.