அருணாசல பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான துப்டன் தெம்பா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.
அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சராக இருந்தவர் துப்டன் தெம்பா. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் ஆர்.கே.மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
எனினும், அவரது உடல்நலம் நேற்று மோசமடைந்தது. இதனை தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை காலமானார். அவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தவாங் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ளார். வாழ்நாள் முழுவதும் சமூக பணியாற்றிய அவர், எம்.ஏ. மற்றும் எம்.பில் படித்துள்ளார். இந்திய வருவாய்த் துறை அதிகாரியாகவும், பின்னர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகவும் இருந்துள்ளார். அவரது மறைவுக்கு அருணாசலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி இரங்கல் தெரிவித்துள்ளது.