சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சென்னையில் உள்ள தனியார் பள்ளியின் கிரிக்கெட் மைதான தொடக்க விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெறவில்லை. இது நிச்சயம் இந்தியாவுக்கு பெரிய இழப்பு தான். அதே சமயம் இவர்கள் இல்லாதது அணியில் புதிய சாம்பியன் வீரரை அடையாளம் காண்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இப்போது நாம் நறைய கிரிக்கெட் விளையாடுகிறோம். அதனால் வீரர்கள் காயம் அடைகிறார்கள். காயம் விஷயத்தில் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. பும்ராவின் காயம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரர் சிறப்பாக செயல்பட வாய்ப்பாக இது அமையும்.
நம்மிடம் போதுமான வலுவுடன் சிறந்த அணி உள்ளது. அரைஇறுதிக்கு முன்னேறி விட்டால் அதன் பிறகு யாருடைய தொடராகவும் அது அமையலாம். எனவே சிறந்த தொடக்கத்தை எட்ட கடுமையாக முயற்சிக்க வேண்டும். அரைஇறுதியை எட்டி விட்டால் அதன் பிறகு அனேகமாக கோப்பையை வெல்வதற்குரிய போதுமான பலம் வந்து விடும்.
இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.