டெல்லி : மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் இன்று அதிகாலை பேருந்து மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் பேருந்து தீப்பிடித்தது. அதிலிருந்த பயணிகள் பரிதாபமாக 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன் இழப்பீடும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்த விபத்து வேதனை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நாசிக்கில் நடந்த பேருந்து தீ விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.