மதுரை மத்திய சிறையில், சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்த காவலரால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சிறை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு சிறைத்துறை அதிகாரிகள் குறித்தும், சிறை நிர்வாகம் குறித்தும் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் இரண்டு முறை துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளாகினார். பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை புழல் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து நிர்வாக காரணங்களுக்காக காவலர் அறிவழகனை கொடைக்கானலில் மூடப்பட்ட கிளைச் சிறைக்கு பாதுகாப்பு பணிக்காக மாற்றப்பட்டார். அங்கும் அவர் சரிவர பணிக்கு வராமல் இருந்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து கொடைக்கானல் கிளைச் சிறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. கடந்த 30 ஆம் தேதி முதல் அறிவழகன் பணிக்குச் செல்லவில்லை என சிறை நிர்வாகத்தால் கூறப்படுகின்றது. அதன் காரணமாக நேற்று முன்தினம் மதுரை சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காவலர் அறிவழகன் தனக்கு வேறு கிளைச் சிறையில் பணி ஒதுக்குமாறு மதுரை மத்தியசிறை கண்காணிப்பாளர் வசந்த கண்ணனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து சிறையில் வழக்கறிஞர் சந்திக்கும் அறையில்’ அறிவழகனுக்கு பணி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு சென்ற அறிவழகன் திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி உடனடியாக சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் திடிரென சப்தமாக கத்திய அறிவழகன் கம்பியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதோடு ‘என் சாவுக்கு நீங்கள்தான் காரணம் என்று சொல்லுவேன்’ என கண்காணிப்பாளரை பார்த்து மிரட்டல் விடுத்து தாக்க முயன்றுள்ளார்.
இதனையடுத்து அவரை சக காவலர்கள் மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்து சிகிச்சை பெற வைத்தனர். காவலர் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து விசாரணை செய்ய மதுரை மத்திய சிறை டி.ஐ.ஜி பழனி உத்தரவிட்டுள்ளார். மதுரை மத்திய சிறையில் காவலர் ஒருவர் சிறை கண்காணிப்பாளருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உண்மையை கண்டறிய விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM