சென்னை: முக்கோண காதல் விவகாரத்தில் பெண்ணின் காதலரை கொலை செய்த வாலிபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்த பிகாம் பட்டதாரி சக்திவேல், பால் வியாபாரம் செய்து வந்தார். அவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அப்பெண் படிக்கும் டியூட்டோரியலில் படிக்கும் லட்சுமணன் என்பவரின் சகோதரர் ராமன் என்பவரும் அப்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்த விவரம் தெரிந்த சக்திவேல், ராமனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமன், தனது உறவினர் கவுதமன் என்பவருடன் சேர்ந்து, சக்திவேலை கடந்த 2016 பிப்ரவரி 13ம் தேதி கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வெண்ணாந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் நீதிமன்றம், ராமனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், கவுதமனை விடுதலை செய்தும் 2018ல் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ராமன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்தது. குற்றம் சாட்டப்பட்ட ராமன் தரப்பில், வழக்கில் ஏற்றுக் கொள்ளத்தக்க சாட்சியங்களையும், ஆதாரங்களையும் கொண்டு குற்றச்சாட்டுக்களை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க காவல் துறை தவறிவிட்டதால், தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
ஆனால், குற்றச்சாட்டுகள் உரிய சாட்சிகளின் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நேரில் பார்த்த சாட்சியங்கள் ஏதுமில்லாமல், காதம் விவகாரத்தால் முன் விரோதம், குற்றம் சாட்டப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலம், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கைப்பற்றப்பட்டது ஆகிய சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
வழக்கில் உள்ள ஆதாரங்கள், ராமனை சந்தேகிக்கும் வகையில் இருந்தாலும், அவை உண்மை தான் என்பதை நிரூபிக்க போலீசார் தவறிவிட்டதாக குறிப்பிட்ட நீதிபதிகள், குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, ராமனை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.