கனமழையைத் தாங்குமா தமிழ்நாடு? கமலஹாசன் கேள்வி…

சென்னை: சாதாரண மழையையே தாங்காமல் தவிக்கும் தமிழ்நாடு, கனமழையைத் தாங்குமா? வடகிழக்குப் பருவமழைக்குத் தமிழ்நாடு தயாரா? நிவாரணம் தீர்வாகாது! என தமிழகஅரக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையத், தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவித்து உள்ளது.  இதனையடுத்து,  மழை பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. சென்னை யில், மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும், மழைநீர் வடிகால் பணிகளை 10ந்தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தி உள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் நேரில் சென்று மழைநீர்வடிகால் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மழையையே தாங்காமல் தவிக்கும் தமிழ்நாடு, கனமழையைத் தாங்குமா? 2015-ல் ஏற்பட்ட மழை வெள்ளப் பேரிடருக்குப் பிறகு, வடகிழக்குப் பருவமழை மக்களின் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த நாட்களும், உணவுக்கும், தண்ணீருக்கும்கூட பரிதவித்த சூழலும் இன்னும் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை. தற்போது ஒரு மணி நேர மழைக்கே சென்னை நிலைகுலைந்துபோகிறது. பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குடியிருப்புகளில் நுழையும் கழிவுநீரால் மக்கள் துயரமடைகின்றனர்.

சென்னையில் வெள்ள நிவாரணத் திட்டங்கள் மற்றும் நீண்டகால நீர்மேலாண்மைத் திட்டங்கள் வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு, தங்களது இடைக்கால அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தெளிவில்லை.

வெள்ளம் சூழ்ந்த பிறகு உணவும், நிவாரணப் பொருட்களும் தருவது தீர்வாகாது. மாநிலம் முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்களைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, மழை வெள்ளம் தங்கு தடையின்றிப் பயணிக்க நடவடிக்கை எடுப்பதே நிரந்தரத் தீர்வாகும். கடந்தகால அவதிகளையும், துயரங்களையும் மக்கள் மீண்டும் அனுபவிக்காத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.’

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.