தி ஆக்டோபஸ் நியூஸ் மாகசின் ஆன்லைன் (TONMO) என்னும் இணையதள சமூகம் ஆக்டோபஸ், கணவாய்கள், சிப்பிகள் போன்றவற்றின் உயிரியல், பன்முகத்தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து கட்டுரைகள் வெளியிடும் நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த அக்டோபர் 8, 2007- ஆம் ஆண்டு முதன்முதலில் உலக ஆக்டோபஸ் தினத்தை அறிவித்தது, அதன்படி இன்றுவரை அக்டோபர் 8 -ம் தேதி “ஆக்டோபஸ் தினமாக” கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆக்டோபஸ்க்கு 8 உணர்ச்சிகொடுக்குகள் உள்ளன. அவை 2 ‘கால்கள்’, 6 ‘கைகளாக’ பிரிக்கப்பட்டுள்ளன. ஆக்டோபஸ்சின் உணர்ச்சிக்கொடுக்குகளின் எண்ணிக்கை எட்டு என்பதால் தான் அக்டோபர் 8-ஆம் தேதி, உலக ஆக்டோபஸ் தினமாக அறிவிக்கப்பட்டது.
ஆக்டோபஸ்சில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட வகைகள் உன்டு. பெரும்பாலும் அவை கடல்களையும், கடற்பரப்புகளையும் உறைவிடமாக கொண்டிருக்கும். நண்டுகள், இறால்களை உணவாக கொள்ளும்.
பொதுவாக ஆக்டோபஸ் 16 அடி வரை வளரும். 50 கிலோ எடைக் கொண்டதாகவும் இருக்கும். பசிபிக் பெருங்கடலில் வாழும் இராட்சத ஆக்டோபஸ் தான் உலகிலேயே மிகப்பெரிய ஆக்டோபஸ்.
தாமோக்டோபஸ் மிமிக்கஸ் எனப்படும் ஆக்டோபஸ் வகை வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், ஆபத்தை உணர்ந்தால் வெள்ளை கோடுடன் பழுப்பு நிறத்தில் தன்னை மாற்றிக் கொள்ளும் இயல்புக் கொண்டது. நீல வளையம் கொண்ட ஆக்டோபஸ் தான் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஆக்டோபஸ் இனம்.
அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், “ஆக்டோபஸ் நீண்டகால மற்றும் குறுகிய கால நினைவாற்றல் கொண்டவை” என்று கூறுகின்றனர். அவற்றால் மனிதர்களையும் அடையாளம் காண முடியுமாம். அவை மிகவும் புத்திசாலித்தனம் வாய்ந்த உயிரினம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பெரும்பாலும் ஆக்டோபஸ்கள் கடுஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். அவை ஓய்வெடுக்கும் நேரத்தில் பிங்க் நிறத்தில் தோற்றமளிக்கும்.
ஆக்டோபஸ்களின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். இவற்றுக்கு மூன்று இதயம் உண்டு. இதன் மூளை டோனட் வடிவத்தில் இருக்கும்.
ஆக்டோபஸ்சின் விஷத்தில் டெட்ரோடோட்டாக்சின், ஹிஸ்டமைன், ட்ரிப்டமைன் போன்ற நச்சுக்களை உற்பத்தி செய்யும். இந்த விஷம் மனித உடலில் பரவினால் பார்வை இழப்பு, மூச்சுப் பிரச்சினைகள், இருதய பாதிப்புகளை ஏற்படுத்தும். இறப்பு நிகழவும் வாய்ப்பு உள்ளது.
ஒரு முறை இனப்பெருக்கத்தில் ஈடுபட்டால், அதற்குப் பின் ஆண் ஆக்டோபசுகள் அதிகபட்சம் சில மாதங்களே உயிர்வாழும். ஒரு பெண் ஆக்டோபஸ் 400,000 முட்டைகள் வரை இடும். அந்த முட்டைகள் பொரிய ஐந்து மாதங்கள் ஆகும். அத்தனை நாட்களும் அந்த பெண் ஆக்டோபஸ் இரவு பகல் பாராமல் முட்டைகளைப் பாதுகாக்கும். இதனால் பெரும்பாலும் அந்த காலகட்டத்தில் உணவுகளைக் கூட தவறவிடுகிறது. அதிகபட்சம் பெண் ஆக்டோபசுகள் தன் முட்டைகள் பொரிந்த பின் ஒரு சில நாட்களே உயிர் வாழ்கின்றன.