சென்னை: பரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சீசன்-6 அக்டோபர் 9ஆம் தேதி தொடங்குகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். நாளை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைக்கவுள்ளார் கமல்ஹாசன். பின்னர், வழக்கம்போல் பிக் பாஸ் இல்லத்தை பார்வையாளர்களுக்கு சுற்றி காண்பிப்பார். பிக்பாஸ் சீசன் 6 தொடங்குவதற்கு முன்பே, போட்டியாளர்கள் குறித்த யூகங்கள் இணைய உலகில் வெளிவரத் தொடங்கின. இன்னும் பட்டியல் உறுதியாகவில்லை என்று சொல்லப்பட்டாலும், சிலரது பெயர்கள் ஊகங்களாக உலா வந்தன.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் நாளை முதல் ஒன்றாக இருக்கப்போகும் 20 போட்டியாளர்களின் பெயர் இவை. இது ஏறக்குறைய உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் திவ்யதர்ஷினி என்னும் டிடி, மன்சூர் அலி கான், மணிகண்டன் ராஜேஷ், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ரச்சிதா மகாலட்சுமி, விஜே ரக்ஷன், ராஜலட்சுமி செந்தில், விஜே அர்ச்சனா, ஷில்பா மஞ்சுநாத், தர்ஷா குப்தா, ஸ்ரீநிதி சுதர்ஷன், மணிச்சந்திர மணி, ரோஷினி ஹரிப்ரியன், டி.எம். நீலகண்டன், மனிஷா யாதவ், எம்.எஸ்.பாஸ்கர், அஷ்வின் குமார் லக்ஷ்மிகந்தன், முகேஷ் ரவித்பர், ம.ரவி என மொத்தம் 20 பெயர்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சீசன்களைவிட இந்தமுறை அதிக போட்டியாளர்களை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறக்கப்படலாம். ஒவ்வொரு துறையில் இருந்தும் ஸ்டாராக இருப்பவர்களை அலசி ஆராய்ந்து தூக்கியுள்ளது. குறிப்பாக, சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறக்கப்பட இருப்பதால், இந்த பட்டியல் மேலும் அதிகமாகலாம் என்றும் கூறப்படுகிறது.
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பமாவதற்கு பல நாட்கள் முன்பே, அதுகுறித்த ப்ரொமோக்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றன.
பிக்பாஸ் வீட்டை காட்டுடனும் போட்டியை வேட்டையுடனும் ஒப்பிடும் கமலஹாசன், “காடுன்னு ஒன்னு இருந்தா ராஜான்னு ஒருவர்தானே இருக்க முடியும்… ஆனால், இந்த வீட்டில் கடைசியாக யார் மிஞ்சியிருக்கப் போறதுன்னு முடிவு பண்றது, அவங்க இல்ல…நீங்க” என்று சொல்லி பார்வையாளர்களை நிகழ்ச்சியைப் பார்க்கத் தூண்டும் தூண்டிலையும் போடுகிறார்.
பார்வையாளர்களிலிருந்தும் சிலர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லவுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு ப்ரொமோவில், “உங்களில் இருந்தும் சிலர் விளையாட வராங்க… வரவேற்க தயாராகுங்க” என்று கமல்ஹாசன் சொல்வது ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது.