குவாஹாட்டி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, பாஜக மூத்த நிர்வாகிகளின் கால்களைக் கழுவி பாத பூஜை செய்து அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அசாம் தலைநகர் குவாஹாட்டியில் பாஜக புதிய அலுவகலம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர். பின்னர் அமித் ஷா காமாக்யா கோயிலுக்குச் செல்கிறார்.
இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பாஜக மூத்த நிர்வாகிகளின் கால்களைக் கழுவி பாத பூஜை செய்து அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தனது செய்கை குறித்து ஹிமந்த சர்மா, அசாமில் பாஜகவை வலுப்படுத்த உதவிய மூத்த நிர்வாகிகள் கால்களைக் கழுவி மரியாதை செய்வதில் தாம் பெருமிதம் கொள்வதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டரில் வீடியோவைப் பகிர்ந்துள்ள ஹிமந்த பிஸ்வ சர்மா, “மூத்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவது என்பது பாஜகவின் பாரம்பரியம். அது இந்திய கலாசாரமும் கூட” என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, பாஜக மூத்த நிர்வாகிகளின் கால்களை சுத்தம் செய்வதோடு பாதங்களைத் தொட்டு வணங்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
Showing respect to the seniors, an ethos of Indian culture, is a cornerstone of our party’s tradition.
Honoured to have washed the feet of our respected senior BJP functionaries whose immense contributions helped strengthen our party’s base in the early phase in Assam. pic.twitter.com/dKGXvZPASy
— Himanta Biswa Sarma (@himantabiswa) October 8, 2022
பாஜக மேலிடத்திற்கு நெருக்கமானவர்: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேன கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியபோது அவர்களுக்கு அசாம் பாஜக தான் அடைக்கலம் கொடுத்தது. மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் மாற்றத்திற்கு கட்சி மேலிட உத்தரவின்படி உதவியாக இருந்தவர் தான் இந்த ஹிமந்த பிஸ்வ சர்மா.