சென்னை: சென்னை மழைநீர் வடிகால் பணிகள் திருப்திகரமாக உள்ளதாக, நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் கால்வாய்களைத் தூர்வாருதல், நீர்வளத் துறை மற்றும் பொதுப்பணித் துறை சார்பில் பக்கிங்காம் கால்வாய்களைத் தூர்வாருதல், மாநகராட்சி சார்பில் ஓட்டேரி கால்வாய், மாம்பலம் கால்வாய் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 15-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்க வாய்ப்பு உள்ளதால், இந்தப் பணிகளை அக்டோபர் மாதம் 15-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.8) நேரில் ஆய்வு செய்தார். இதன்படி, சென்னை அசோக் நகர், கொளத்தூர் வேலவன் நகர், அம்பேத்கர் கல்லூரிச் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பேசின் பாலம், வால்டாக்ஸ் சாலை, ரிப்பன் மாளிகை, என்எஸ்சி போஸ் சாலை உள்ளிட்ட பல இடங்களில் அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குறைந்தபட்சம் 15 நாட்கள், அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவுபெறும். எப்படிப்பட்ட மழை வந்தாலும், அதை சமாளிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது நடைபெற்று வரும் பணிகள் திருப்திகரமாக உள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.