வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் இந்த வந்தே பாரத் ரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். டெல்லி முதல் வாரணாசி வரை மற்றும் டெல்லி முதல் கத்ரா வரை என 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், 3ஆவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கடந்த 30ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், வந்தே பாரத் விரைவு ரயில்கள் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கி அதன் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. முதல் நாள் எருமை மாடு மோதியும் இரண்டாவது நாள் பசு மாடு மோதியும் வந்தே பாரத் விரைவு ரயில் சேதமடைந்த நிலையில், மூன்றாவது நாளாக டெல்லி -வாரணாசி இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயிலின் சக்கரங்கள் சேதமடைந்ததால் வழியிலேயே நின்றது. இதனால், சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் காத்திருந்து தவிப்புக்கு ஆளாகினர்.
மும்பையில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் குறுக்கே, நான்கு எருமை மாடுகள் தண்டவாளத்தில் குறுக்கிட்டது. இதன் காரணமாக வந்தே பாரத் ரயில் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ரயில் என்ஜினின் முன்பகுதி சேதமடைந்தது. அதேபோல், இரண்டாவது நாள் பசு மாடு மோதியும் வந்தே பாரத் விரைவு ரயில் சேதமடைந்தது.
அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் இருந்து வாரணாசிக்கு வந்தே பாரத் விரைவு ரயில் வண்டி எண்-22436 இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது உத்தரப்பிரதேச மாநிலம் டான்கவுர் மற்றும் வைர் ரயில் நிலையங்களுக்கு இடையே அந்த ரயிலானது சென்றுகொண்டிருந்தபோது, ரயிலின் சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வழியிலேயே நிறுத்தப்பட்டது. C8 கோச்சின் இழுவை மோட்டாரில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்கள் இந்த கோளாறை கண்டறிந்து ரயிலை நிறுத்துமாறு ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளை எச்சரித்ததாக கூறப்படுகிறது. 20 கிமீ தூரத்தில் உள்ள குர்ஜா ரயில் நிலையத்திற்கு கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து, ரயிலில் இருந்த பயணிகள் சதாப்தி விரைவு ரயிலுக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.