இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அக்டோபர் இறுதியில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை, வழக்கத்தைக் காட்டிலும் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2015-ல் ஏற்பட்ட மழை வெள்ளப் பேரிடருக்குப் பிறகு, வடகிழக்கு பருவமழை மக்களின் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த நாட்களும், உணவுக்கும், தண்ணீருக்கும்கூட பரிதவித்த சூழலும் இன்னும் நெஞ்சத்தில் இருந்து அகலவில்லை. தற்போது ஒரு மணி நேர மழைக்கே சென்னை நிலை குலைந்துபோகிறது. பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதையும் படியுங்கள்: ஹெல்மெட் அணியாமல் சென்ற ஏட்டுக்கு ரூ.100 அபராதம் சிறு மழைக்கே பெரும்பாலான மாவட்டங்கள் தத்தளிக்கின்றன.
‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்தும், பாதிப்பைத் தடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் சேதமடைந்தும், தூர்ந்தும் போயுள்ளன. அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறு, நதிகள் மற்றும் கழிவுநீர்க் கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் நீரோட்டத்தைத் தடுக்கின்றன. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ள சூழலில், வடகிழக்குப் பருவமழை வலுத்துப் பெய்யும்போது நேரிடும் பேரிடர்களை தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது?
சென்னையில் வெள்ள நிவாரணத் திட்டங்கள் மற்றும் நீண்டகால நீர் மேலாண்மைத் திட்டங்கள் வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு, தங்களது இடைக்கால அறிக்கையை தமிழக முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தெளிவில்லை.
வெள்ளம் சூழ்ந்த பிறகு உணவும், நிவாரணப் பொருட்களும் தருவது தீர்வாகாது. மாநிலம் முழுவதும் உள்ள மழைநீர் வடிகால்களைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, மழை வெள்ளம் தங்கு தடையின்றிப் பயணிக்க நடவடிக்கை எடுப்பதே நிரந்தரத் தீர்வாகும். கடந்தகால அவதிகளையும், துயரங்களையும் மக்கள் மீண்டும் அனுபவிக்காத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.