நாகப்பட்டினத்தில் ரூ. 3.25 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் மேம்படுத்தும் பணி

* இரவு, பகலாக பணிகள் மும்முரம்
* மழைக்காலம் தொடங்குவதற்குள் முடிக்க திட்டம்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்ட் ரூ.3.25 கோடியில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அவுரித்திடலில் தற்காலிக பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு பஸ்கள் வந்து செல்கிறது. எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த இடத்தில் பஸ்கள் நிற்கும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்படாததால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, எட்டுக்குடி முருகன் கோயில் என மூன்று மதத்தை சேர்ந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மாவட்டமாக நாகப்பட்டினம் உள்ளது. அதே நேரத்தில் இயற்கை இடர்பாடு நிறைந்த மாவட்டமாகவும் நாகப்பட்டினம் உள்ளது. இதனால் தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டமாக நாகப்பட்டினம் உள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள், எம்எல்ஏ, சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் தொடர் முயற்சியால் நாகப்பட்டினம் மாவட்டம் தற்பொழுது எல்லா நிலைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தரைமார்க்கமாக வருவதால் சாலை வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் இறங்கியுள்ளது. பல்வேறு திட்ட பணிகளுக்கு இடையில் நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்டை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

 எந்நேரமும் மக்கள் கூட்டமாகவே இருக்கும் நாகப்பட்டினம் புதிய பஸ்ஸ்டாண்ட் போதிய வசதிகள் இல்லாமல் இருந்தது. பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் இட நெருக்கடியும் ஏற்பட்டது. மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேற வசதி இன்றி துர்நாற்றம் வீசியது. இதனால் ஒருங்கிணைந்த பஸ்ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் தற்போது உள்ள புதிய பஸ் ஸ்டாண்டை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக மூலதன மானியத்தில் ரூ.3கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டில் உள்ள கட்டடத்தின் மேல்தளத்தில் தட்டு ஓடு மற்றும் சீரமைப்பு பணிகள், நடைபாதையில் டைல்ஸ் அமைப்பு, பேவர் பிளாக் மற்றும் தார் மூலம் மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஒரு மாத காலத்தில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்காலம் தொடங்குவதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்ட் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் பஸ் ஸ்டாண்டின் உள்ளே பஸ்கள் செல்லாமல் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அவுரித்திடலில் தற்காலிக பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து இரவு, பகலாக பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் எந்தெந்த ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் எங்கு நிற்கும் என போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இதனால் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்களே செல்ல வேண்டிய ஊர்களுக்கு பஸ் ஏற முடியாமல் சிரமப்படுகின்றனர். குறிப்பாக டவுன் பஸ்கள் எங்கு நிற்கிறது.

நீண்ட தூர பஸ்கள் எங்கு நிற்கிறது என தெரியாத நிலை உள்ளது. விழாக்காலம் தொடங்கிவிட்டதால் வெளியூர்களில் இருந்து வந்து செல்லும் பயணிகள் நலன்கருதி தற்காலிக பஸ்ஸ்டாண்டில் பஸ்கள் நிற்கும் இடத்தை குறிப்பிடும் வகையில் வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.