கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் திமுகவினரின் தலையீடு! சீமான் குற்றச்சாட்டு

சென்னை: அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில் திமுகவினரின் தலையீடு அதிகரித்து வருகிறது. இது கண்டனத்திற்கு உரியது என நாம் தமிழகர் கட்சி தலைவர்  சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், ஆளுங்கட்சியினரின் தலையீட்டை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என  வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், , தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுவது பெரும் அதிர்ச்சி யளிக்கிறது. திமுகவினரின் தலையீட்டின் பேரில் நடைபெறும் இத்தகைய முறைகேடுகளுக்கு தமிழ்நாடு அரசு துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது.

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண்கள் பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்களைத் தவிர்த்துவிட்டு, இட ஒதுக்கீட்டையும் புறக்கணிக்கும் வகையில், ஆளும் திமுகவினர் தங்களது அரசியல் செல்வாக்கையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தி கல்லூரி நிர்வாகத்தை மிரட்டி, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு முறைகேடாக இடங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது அப்பட்டமான சமூக அநீதியாகும்.

அரசு கலைக் கல்லூரியில் சேர்ந்து பயின்று பட்டம் பெற முனையும் கிராமப்புற ஏழை மாணவர்களது உயர்கல்வி கனவினை அழித்தொழிக்கும் வகையில் ஆளுங்கட்சியினரால் அரங்கேற்றப்படும் இத்தகைய முறைகேடுகள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி, தவறான முறையில் வழங்கப்பட்ட இடங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, முறைகேடுகள் நடைபெற்றுள்ள திருவண்ணாமலை உள்ளிட்ட அரசு கலைக் கல்லூரிகளில் மறுகலந்தாய்வு வைத்து, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு அவ்விடங்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.