‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு வாரம் ஆன போதிலும் படம் குறித்த விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. நாளுக்கு நாள் படம் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஒருபுறம் ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா என்று விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றொருபுறம் ராஜராஜன் காலம் பொற்காலமா அல்லது இருண்ட காலமா என்று விவாதித்து கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் தாண்டி யூ-ட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சோழர்கள் கால வரலாறு குறித்து நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு படக்குழுவையும் தாண்டி பலரும் பல வகையில் புரமோஷன் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக பார்க்கப்படும் முக்கியமான இரண்டு வரலாற்று பிழைகள் குறித்து பார்க்கலாம்.
வரலாற்று பிழைகள்:
1. கள்ளழகர் வழிபாடு
ஆதித்த கரிகாலன் தலைமையிலான சோழர்களின் படைகள் ராஷ்டிரகூடர்கள் உடன் போர் செய்யும் காட்சிகளில் இருந்துதான் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமே தொடங்கும். போரில் வெற்றி பெற்ற உடன் ஆதித்த கரிகாலன் (விக்ரம்) உடன் வந்தியத்தேவன் (கார்த்தி) சந்திக்கும் காட்சி படத்தில் இடம்பெற்றிருக்கும். அப்போது, வந்தியத்தேவன் குடித்திருப்பார். ஆதித்த கரிகாலனிடம் “போரை முடித்துவிட்டு அப்படியே கள் அழகருக்கு ஒரு பூஜை” என்று வந்தியத்தேவன் கூறுவார்.
உண்மையில் கள்ளழகர் வழிபாடு என்பது அதற்கு பிற்காலத்தில் நாயக்கர் காலத்தில் தான் உருவாகி இருக்க வேண்டும். மதுரை நகருக்கு அருகில் உள்ள அழகர் மலையில் பெருமாள் கோயில் உள்ளது. அது மிகவும் பழமையான கோயில் என்பதற்கான சான்றுகள் சிலப்பதிகாரம், பரிபாடல் உள்ளிட்ட இலக்கியங்களில் உள்ளன. அதாவது அது ஒரு அழகர் கோயில். பின்னர் தான் அது கள்ளழகர் ஆக மாறியது. அதற்கான ஒரு வரலாறு உள்ளது.
ஆதித்த கரிகாலன் கி.பி 971-ம் ஆண்டில் இறந்துவிட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. ஆனால், கள்ளழகர் வழிபாடு என்பது சோழர்கள் காலத்திற்கு பின்பு உருவான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக விஜயநகர பேரரசு காலம் அல்லது நாயக்கர் காலம். அதனால், ஏன் முன்கூட்டியே அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்ற ஐயம் எழுகிறது.
வந்தியத் தேவன் சொல்வதை கள் – அழகர் என்ற தனித்தனி வார்த்தைகளாக அர்த்தப்படுத்தி மது அருந்துவதை சொல்வதாக எடுத்துக் கொண்டாலும், அழகரை வழிபடும் வழக்கம் சோழர்களின் சிற்றரசுகளில் கிடையாது என்பதால் இதுவும் முரணை எழுப்பியே நிற்கிறது.
2. சம்புவரையர் மாளிகை
சோழப்பேரரசின் சிற்றரசர்களாக விளங்கிய சம்புவரையர்கள் ஆட்சி செய்த பகுதிதான் கடம்பூர். பொன்னியின் செல்வனின் மதுராந்தகனுக்கு மகுடம் சூட்ட பழுவேட்டரையர் தலைமையில் ஒரு சதியாலோசனை நடக்குமே அது இந்நகரில்தான். அடுத்த பாகத்தில் வரலாற்றை உலுக்கிய ஒரு மாபெரும் சம்பவம் ஒன்றும் இதே நகரில் அமைந்துள்ள மாளிகையில்தான் நிகழும். தற்போது மாட மாளிகையின்றி, அமைதியான சூழலில் இருக்கும் இந்த கடம்பூர் நகரம் “கீழக்கடம்பூர்” எனும் பெயரில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அருகே அமைந்துள்ளது.
சம்புவரையர் என்பவர்கள் சோழர்கள் ஆட்சியில் படைத் தளபதிகளாக இருந்தவர்கள் என்றே வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்றவுடன் அவர்களுக்கு உட்பட்ட குறுநில மன்னர்கள் பலரும் அவர்கள் ஆட்சி செய்த பகுதியின் மன்னர்களாக முடிசூடிக்கொண்டனர். அவ்வாறு திருவண்ணாமலை மாவட்டத்தின் படைவீட்டை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் சம்புவரையர்கள். இவர்களின் ஆட்சிப்பகுதி திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் வரை பரவியிருந்தது. குறுகிய காலமே இவர்கள் ஆட்சி செய்திருந்தாலும் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றனர்.
சம்புவரையர்களின் முதல் தளபதியின் பெயரே கி.பி 1069 ஆம் ஆண்டு முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் தான் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அடித்து சொல்கிறார் சம்புவரையர் வரலாறு குறித்து ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்ற வரலாற்று ஆய்வாளர் அமுல்ராஜ். அப்படியிருக்கையில் 10-ம் நூற்றாண்டிலேயே சம்புவரையர் மாளிகையில் சதி நடப்பதாக ‘பொன்னியின் செல்வனில்’ காட்சிப்படுத்தப்படுகிறது.
சோழப் பேரரசை உருவாக்குவதில் பெரும்பங்காற்றிய பல சிற்றரசுக் குடும்பங்களுள் சம்புவரையர் குடும்பமும் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த காலம் தான் சரியானதா என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும். 100 ஆண்டுகள் பின் தங்கியே அவர்களின் வரலாறு தொடங்குவதாக சிலர் முன் வைக்கும் கேள்விகளுக்கும் விடை தேவையாக உள்ளது.