பி.யூ.சி.எல் (PUCL – People’s Union for Civil Liberties) அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் ஆதிதிராவிட பெண்களில் மூன்றில் ஒருவர் குழந்தை என்று தெரிவித்துள்ளது.
`பட்டியலின சாதிகள் மற்றும் பட்டியலின பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் (SC/ST (PoA) சட்டம்), 1989 – தமிழ்நாடு நிலை 2021’ என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது நிகழும் வன்முறை குறித்து இந்த ஆய்வில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன் முடிவில், 2021-ம் ஆண்டில் பட்டியலினத்தவர்கள் மீது, அதற்கு முந்தைய ஆண்டைவிடவும் அதிகளவு வன்முறைகளும் குற்றங்களும் நிகழ்ந்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.
மேலும் இந்த ஆய்வறிக்கையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பல தரவுகள் தெரியவந்துள்ளன. அதில் மிக முக்கியமான சில இங்கே…
* 2021-ல், அதற்கு முந்தைய ஆண்டைவிடவும் பட்டியல் சாதியினர் மீது அதிகளவு வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. இந்திய அளவில் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் மிகக்குறைந்த வன்முறைகள்தான் நிகழ்ந்துள்ளன.
* தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் 422 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 123 (29.14%) வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களாகவும், 6 (1.42%) பேர் பழங்குடியினர்களாகவும் இருந்துள்ளனர். இவர்களில் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களில் 20%-ம் பேரும், பாதிக்கப்பட்ட பட்டியலின பழங்குடியினரில் 1.1%-ம் பேரும் (அதாவது இரு தரப்பிலும் பாதிக்கப்பட்டோரில் 50% பெண்கள்) பிற சமூகத்தை சேர்ந்த ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
* பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர்கள் வாழும் இடத்தில் பாதுகாப்பு இல்லை. இவர்கள், பிற சமூகத்தை சேர்ந்த பெண்கள் தங்கள் சுயசமூக மற்றும் பிறசமூக ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதை விடவும், 29% அதிகமாக தங்கள் சுயசமூக ஆண்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.
* தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த பெண்களை விடவும் சிறுமிகள் தான் அதிக பாலியல் வன்கொடுமைக்கு (சராசரியாக 3:1) உள்ளாகின்றனர். இது இந்திய அளவில் மிக உயரிய ஒப்பீடாக உள்ளது. பிற இடங்களில் இந்த எண்ணிக்கை சராசரியாக 1:2 என்று உள்ளது. அதாவது, பிற இடங்களில் சிறுமிகளைவிடவும் பெண்களே அதிக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர். இதேபோல இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் பட்டியலின பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களில் சிறுமிகள், பெண்களைவிடவும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் (தமிழ்நாட்டில் 5:1-என்றும், இந்திய அளவில் 1:1.6 என்றும் இது உள்ளது.) 2020-ம் ஆண்டிலும் இதே நிலையே நீடித்திருக்கிறது. 2020-ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் 66% பேர், 18 வயதுக்கு உட்பட்டோர்தான்.
* இக்குற்றங்கள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில், பிற மாநிலங்களைவிடவும் தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது. குறிப்பாக ஆதி திராவிடர் மீதான குற்றங்களில் 84.6% குற்றங்கள் குற்றப்பத்திரிகைகளாக தமிழ்நாட்டில் தாக்கலாகின்றன. இதுவே தேசிய அளவில் பார்க்கையில், 80% குற்றங்கள் மட்டுமே குற்றப்பத்திரிகைகளாக தாக்கலாகின்றன.
* SC/ST (PoA) Act-ன் கீழ் பதிவாகும் எஃப்.ஐ.ஆர், 60 நாள்களுக்குள் விசாரிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகைகளாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், அதில் பெரும்பாலும் நடப்பதில்லை. உதாரணத்துக்கு, ஏப்ரல் 30, 2022-கணக்கின்படி நிலுவையில் உள்ள 592 வழக்குகளில், மூன்றில் ஒரு பங்கு வழக்குகள், அதாவது 208 வழக்குகள் (35%), 2021-ல் பதியப்பட்டவையாகும். அதாவது, 120 நாள்களை கடந்தும்கூட, விசாரணைகள் முடிவடையவில்லை. இதேபோல கொலை வழக்குகளில் 78% வழக்குகள் காலம் கடந்து நிலுவையிலும், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் 40% வழக்குகள் நிலுவையிலும் உள்ளன.
* இதில் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை பார்க்கையில், சுமார் 6,175 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கலானவையாக இருக்கின்றன. இதில் ஒரு வழக்கு, 1992-ல் பதிவான வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 5,000 (துல்லியமாக 4,946) வழக்குகளில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தீர்ப்பு தாமதமாகி உள்ளது. சுமார் 30 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன, மேலும் 501 வழக்குகள் 10 முதல் 20 ஆண்டுகள் நிலுவையில் உள்ளன.
* தேசிய குற்றப்பிரிவின் அறிக்கையின்படி, 2021-ல் தமிழகத்தில் ஆதிதிராவிடர்களுக்கு எதிராக குற்றங்கள் மீதான தண்டனை விகிதம் 18.4% என்றுள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 300% தண்டனை அதிகரித்த விகிதமாக உள்ளது. வரவேற்கத்தக்க மற்றும் பாராட்டத்தக்க புள்ளிவிவரம் இது. என்ற போதிலும் 2021-ல் பட்டியலின பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் எந்த வழக்கும் முடித்துவைக்கப்படவில்லை
* வழக்கின் விசாரணை கட்டங்களின்போதே வழங்கப்பட சுமார் ரூ.30 கோடி (ஒரு வழக்கிற்கு சராசரியாக ரூ. 50,000 என ரூ.30,87,50,000 வரை நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது) நிவாரணமும் இணைக்கப்பட்டுள்ள போதிலும் அது நீதித்துறை தாமதம் காரணமாக மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
– இன்பென்ட் ஷீலா