யோகி பாபுவின் 2 படங்களை இயக்கும் மலையாள இயக்குனர்

மலையாளத்தில் வரி குழியிலே கொலபாதகம், இன்னு முதல் படங்களின் மூலம் புகழ்பெற்றவர் ரெஜிஷ் மிதிலா. தற்போது அவர் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் யானை முகத்தான் படத்தை இயக்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

எனக்கு தமிழ் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மலையாளத்தில் எனது படம் மூலம் ரமேஷ் திலக் எனக்கு அறிமுகமானார். என்கிட்ட இருந்த ஒரு கதையை கேட்ட ரமேஷ், இதற்கு யோகி பாபு சரியாக இருப்பார் என்று சொல்லி அவர்தான் யோகி பாபுவை அறிமுகப்படுத்தினார். அதுதான் 'யானை முகத்தான்'.

பேண்டஸி படமான இதில், ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் வருகிறார். விநாயகரின் தீவிர பக்தர். எங்கே கணபதியை பார்த்தாலும் கரம் கூப்பாமல், உண்டியலில் காசு போடாமல் போக மாட்டார். ஆனால் கொஞ்சம் பிராடு. அப்படியிருக்கும் ரமேஷ் திலக்கிடம், விநாயகம் என்று சொல்லிக்கொண்டு யோகி பாபு அறிமுகமாகிறார். ஒரு கடவுளை நாம் வேண்டிக்கும்போது, நம்ம கஷ்டங்களை தீர்க்கச் சொல்லி மன்றாடும் போது அவரே நேரில் வருவார் என நாம் எதிர்பார்க்க மாட்டோம். அப்படி அவர் வந்து விட்டால், நான் தான் கடவுள் என்று அவர் நிரூபிக்க போராட வேண்டியிருக்கும். ரமேஷ் திலக் வாழ்க்கையில் யோகி பாபு வந்ததால் என்ன வினோத நிகழ்வுகள் நடக்கிறது. அதனால் அவர்கள் வாழ்க்கையில் நடக்கிற திருப்பம் என்ன என்பதே இப் படம்.

ராஜஸ்தானில் ஆரம்பிச்சு, சென்னை வரைக்கும் படபிடிப்பு நடத்தி இருக்கோம். கதை சொன்னதுமே பிடிச்சுப் போய் தேதிகளை கொடுத்து ரெடியாகிட்டார் யோகி பாபு. அவரே, கருணாகரன், ஊர்வசின்னு கூப்பிட்டு நடிக்கச் சொல்லிட்டார். இதனால் எனக்கு முக்கிய கேரக்டர்களுக்கான பாதி வேலை குறைஞ்சு போச்சு. ஒரு கேரக்டருக்குள்ளே வந்து உட்காரும்போது அவருக்குன்னு தனி பாணி வந்திடுது. ஒரு தடுமாற்றமும் இல்லை. வாழ்க்கையோட அடிமட்டத்திலிருந்து யோகி பாபு வந்ததால், டக்குனு உணர்வுகளை கொண்டு வந்து விடுகிறார்.

நான் இயக்க இருக்கும் அடுத்த தமிழ் படத்திலும் அவர் தான் ஹீரோ. அதில் இன்னும் யோகி பாபுவை நல்லா பயன்படுத்தணும்னு ஆசையா இருக்கு. வயலண்ட் அட்வென்சர் படம் அது. படம் முழுக்க சிரபுஞ்சி,மேகாலயாவில் தான் நடக்கும். 'வா கிளம்புவோம்'னு யோகி பாபு சொல்லிக்கிட்டே இருக்கார். இந்த படத்தை ரிலீஸ் செய்து விட்டு அதற்கு தயாராக வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.