கார்கிவ்-ரஷ்யாவையும், உக்ரைனில் இருந்து இணைக்கப்பட்ட கிரீமியாவையும் இணைக்கும் பாலத்தில் எரிபொருள் நிரப்பிய டிரக் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பாலம் கடுமையாக சேதமடைந்தது; ரயில் பாதையும் சேதமடைந்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த, பிப்., 25ல் ரஷ்யா போர் தொடுத்தது. ஏழு மாதங்களையும் கடந்து போர் நடந்து வருகிறது.உக்ரைனில், தன் ராணுவத்தின் ஆதரவுடன், பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு பிராந்தியங்களை, ரஷ்யா சமீபத்தில் தன்னுடன் இணைத்து கொண்டது.
இதைத் தொடர்ந்து, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, 2014ல் உக்ரைனில் கிரீமியா பகுதியை தன்னுடன் ரஷ்யா இணைத்து கொண்டது.
ரஷ்யாவையும், கிரீமியாவையும் இணைக்கும் வகையில், அசோவ் கடலில் பிரமாண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்துக்கான பாலமும், ரயில் பாதைக்கான பாலமும் இதில் உள்ளன.
உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகள் நேற்று அதிகாலையில் தீவிர தாக்குதலை நடத்தின.இந்நிலையில், ரஷ்யா – கிரீமியாவை இணைக்கும் பாலத்தில் நடுவில் நேற்று சென்றபோது, எரிபொருள் நிரப்பிய பெரிய டிரக் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
இதில், சாலை போக்குவரத்துக்கான இரண்டு பாலங்களில் ஒன்று கடுமையாக சேதமடைந்தது. மற்றொரு பாலத்தில் பெரிய சேதம் ஏதுமில்லை என்று கூறப்படுகிறது.
இந்த தீயில், அதன் அருகே உயரத்தில் உள்ள ரயில் பாதையும் பாதிக்கப்பட்டது. அப்போது, எரிபொருளுடன் சென்ற ரயில் தீயில் சிக்கியது. ரயிலின் ஏழு பெட்டிகள் முழுதும் சேதமடைந்தன.
இதையடுத்து, இந்த பாலங்கள் மூடப்பட்டு உள்ளன.உக்ரைன் மீதான போருக்காக ராணுவத்துக்கு தேவையான பொருட்கள், இந்த பாலங்கள் வழியாகவே ரஷ்யா எடுத்து சென்று வந்தது. தற்போது பாலம் சேதமடைந்துள்ளதால், பொருட்கள் எடுத்து செல்வது தடைபட்டுள்ளது.
உக்ரைன் ராணுவம், எரிபொருள் டிரக் வாயிலாக இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக, ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தும்படி ராணுவத் தளபதிகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்