ஏற்கனவே கொலை மிரட்டல் வந்த நிலையில் சல்மான் கானை கொல்ல மீண்டும் சதி: மற்றொரு குற்றவாளி திடுக் தகவல்

மொஹாலி: பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்த நிலையில், மற்றொரு கும்பல் மீண்டும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்பட்டது தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள காவல்துறை உளவுப் பிரிவு தலைமையகத்தில் கடந்த மே 9ம் தேதி நடத்தப்பட்ட கையெறி வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அர்ஷ்தீப் என்பவனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 19 வயதுடைய மற்றொரு தீவிரவாதியை டெல்லி காவல்துறை கைது செய்தது.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாலிவுட் நடிகர் சல்மான் கானைக் கொல்ல அவர்கள் அனுப்பப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கனவே பஞ்சாப் பாடகர் சித்து கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் (தற்போது சிறையில் உள்ளான்), நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்டதாகவும், அதற்காக ஒருவரை நியமித்தாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து சல்மான் கானுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
வெவ்வேறு தீவிரவாத அமைப்புகள் மூலம் சல்மான் கானுக்கு எதிராக கொலை மிரட்டல்கள், சதிகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருவதால், பாலிவுட் மட்டுமின்றி வடமாநில போலீசார் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.