பெருமையும், மரியாதையும் தந்த 'பொன்னியின் செல்வன்' – ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்
மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் கடந்த வாரம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்று புதிய வசூல் சாதனையை நிகழ்த்து உள்ளது.
இந்தப் படத்தில் அதிகமான விஎப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிஜமான லொகேஷன்களில் படமாக்கப்பட்டவை. தாய்லாந்து, வட இந்தியா, ஆந்திரா, சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இப்படத்தைப் பற்றிப் பாராட்டிப் பேசும் அனைவரும் குறிப்பிடும் ஒரு தொழில்நுட்ப விஷயம் ஒளிப்பதிவு.
தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களுக்கு, முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன் தான் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். தமிழில் அவரது ஒளிப்பதிவில் வந்த படங்களில் 'பைவ் ஸ்டார், அந்நியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், வில்லு, காற்று வெளியிடை' படங்களையும், ஹிந்தியில் 'அர்மான், பிர் மிலேங்கே, பர்பி, கோலியோன் கி ராசிலீலா, ராம் லீலா, தமாஷா, ஜக்கா ஜாசூஸ், சஞ்சு, மிஷன் மங்கல்' ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.
'பொன்னியின் செல்வன்' படத்தின் ஒளிப்பதிவு பற்றி தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு நன்றிப் பதிவைப் பதிவிட்டுள்ளார்.
அதில், “பொன்னியின் செல்வன்' போன்ற ஒரு மாபெரும் படத்தில் நானும் ஒரு பங்காக இருந்தது குறித்து உண்மையில் பெருமையும், மரியாதையும் அடைகிறேன். இந்தப் படம் எனது திரைப்படப் படமாக்கலில் ஒரு புதிய பாதையைத் திறந்து வைத்துள்ளது. எனது பெருமை மிகு படங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது.
இந்த அற்புதமான நீண்ட காட்சிப் பயணம் கலரிஸ்ட், உதவி ஒளிப்பதிவாளர்கள், கேமரா குழுவினர், போகஸ் புல்லர், ஜிம்மி ஜிப் குழுவினர், ஸ்டெடிகேம் குழுவினர், பாந்தர் குழுவினர், டிரோன் குழுவினர் மற்றும் அனைத்து லைட்டிங் குழு உறுப்பினார்களாலும் அவர்களது மிகச் சிறந்த ஈடுபாட்டாலும் என்னால் ஒரு சிறந்த பணியை செய்து முடிக்கக் காரணமாக அமைந்தது. அவர்கள் இல்லாமல் இது நடந்திருக்காது.
'பொன்னியின் செல்வன் 1' பெறும் வெற்றி பெற்றுள்ளது. சிறந்த நடிகர்கள், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அவர்களது சிறந்தவற்றை ஒன்றிணைந்து, மணிரத்னம் தலைமையில் வழங்கியதே இந்த காட்சித் தோற்றம் உருவாகக் காரணம். பலரது கனவுகளை அவர் நனவாக்கினார். வெள்ளித் திரையில் இப்படி ஒரு காவியத்தை உயிர்ப்புடன் கொண்டு வரும் திறமை மிக்கவர். பல தடங்கல்களுடன் இது ஒரு நீண்ட பயணமாக இருந்தது. இருப்பினும் அவை தீர்க்கப்பட்டு பல பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் முடிந்தது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் ரவிவர்மன்.