ஷிண்டே, உத்தவுக்கு கிடையாது; சிவசேனா சின்னம் வில் அம்பு முடக்கம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: சிவசேனாவின் வில் அம்பு சின்னத்துக்கு ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே உரிமை கோரி வரும் நிலையில், இந்த சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அதிரடியாக முடக்கியது. மகாராஷ்டிராவில் சிவசேனா உடைக்கப்பட்டு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும், உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகின்றன. தங்கள் அணிதான் உண்மையான சிவசேனா என்று அறிவிக்கும்படி, தேர்தல் ஆணையத்தில் இருதரப்பும் மனு கொடுத்துள்ளன. அதேபோல், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதில், யார் உண்மையான சிவசேனா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்வதில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறி விட்டது. இந்நிலையில், கட்சியின் பெரும்பான்மை எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் தனது பக்கம் இருப்பதால், சிவசேனாவின் வில், அம்பு சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் ஷிண்டே கோரியுள்ளார். இதற்கான கடிதத்தை அதனிடம் அளித்தார். அதில், ‘அந்தேரி கிழக்கு சட்டபேரவை தொகுதிக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல்  நடக்கிறது. எனவே, வில் அம்பு சின்னம் குறித்து விரைவாக முடிவு எடுத்து, அதை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும்,’ என்று கோரினார்.

இந்த கடிதத்துக்கு சனிக்கிழமை 2 மணிக்குள் பதில் அளிக்கும்படி உத்தவ் தாக்கரேவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினமே தனது பதிலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினார். அதில், ‘ஏக்நாத் ஷிண்டே அணியினர் தாங்களாகவே சிவசேனா கட்சியில் இருந்து விலகிச் சென்று விட்டனர். இதனால், கட்சியின் வில் அம்பு சின்னத்துக்கு அவர்கள் உரிமை கோர முடியாது,’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், வில் அம்பு சின்னத்தை இருதரப்புக்கும் வழங்காமல், தேர்தல் ஆணையம் நேற்றிரவு முடக்கியது. இதனால், இனி வரும் தேர்தல்களில் ஷிண்டே, உத்தவ் தாக்கரே இந்த சின்னத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.