ஆலந்தூர்: சென்னையில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில், ஏசி பழுது பார்க்கும் பணியிலிருந்தபோது ஏசி வெடித்ததில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை, கிண்டி, அம்பேத்கர் நகரில், ஜாஸ் சினிமாஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 30-ம் தேதி, இந்நிறுவனத்தின், 3-வது தளத்தில் உள்ள ஏசி இயந்திரம் ஒன்று பழுதடைந்தது. இதனை சரி செய்ய, சென்னை, ஜாபர்கான்பேட்டை பாரத் ஏசி சர்வீஸ் சென்டரை சேர்ந்த, 3 ஊழியர்கள் சென்றனர்.
பழுதை ௮வர்கள் பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென ஏசி கம்ப்ரசர் வெடித்து சிதறியதில், சூளைமேடு பகுதியை சேர்ந்த, சின்னதுரை(50), மதுரவாயலை சேர்ந்த இந்திரகுமார்(22), கோடம்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (41) ஆகிய மூவரும் 60 சதவீதம் தீக்காயமடைந்தனர். இதில், இந்திரகுமார், சின்னதுரை இருவரும் நேற்று, கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாமல்லபுரத்தை சேர்ந்த ஏசி மெக்கானிக் கே.பர்குணன் கூறியதாவது: ஏசி கம்ப்ரசர் வெடிப்பதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். ஏசியில் கசிவு இருந்தால் அந்த கசிவுகளை கண்டுபிடிக்க, என்-2 காஸ் (N2-GAS) வகையை பயன்படுத்தி, கசிவை கண்டுபிடித்து அவற்றை சரி செய்வர். சரி செய்த பின் என்-2 காஸ் வெளியேற்றப்பட்டு, பிறகு ஏசி காஸை நிரப்ப வேண்டும். ௭ன்-2 காஸை வெளியேற்றாமல், ஏசி காஸை நிரப்பினால் கம்ப்ரசர் வெடிக்கும். அதேபோல் கசிவுகளை கண்டுபிடிக்க என்-2 காஸ் பயன்படுத்தும்போது, ஒட்டுமொத்த ஏசியின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். மாறாக ஏசியை நிறுத்தாமல் இயக்கினால் கம்ப்ரசர் வெடிக்கும். இந்த இரண்டு சம்பவங்களால் தான் கம்ப்ரசர் வெடிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோன்ற விபத்துகளை தடுப்பது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ராஜேஷ் கண்ணன் கூறியதாவது: பழுதடைந்த ஏசியை சரி செய்யும்போதும், சுத்தம் செய்யும்போதும் அத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் நுட்பம் தெரிந்தவர்களை பணி செய்ய வைக்க வேண்டும். பழுதை சரி செய்யும்போது பழைய உதிரி பாகங்களை பயன்படுத்தாமல், தரமான பொருட்களை புதிதாக பொருத்த வேண்டும். ஏசியில் அடைக்கப்படும் காஸ் அளவை அறிந்து அடைக்க வேண்டும்.
அனுபவம் உள்ளவர்கள்: அத்தொழில் பற்றி தெரியாத, கொஞ்சமும் அனுபவம் இல்லாத நபர்களை வைத்து காஸ் அடைக்கும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க துறை சார்ந்த தொழில் தெரிந்தவர்கள், தரமான பொருட்களை கொண்டு ஏசி பழுதை சரி செய்ய வேண்டும். மேலும், தரமான ஏசியை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் விபத்து மற்றும் உயிரிழப்பை தடுக்கலாம் என்றார்.