சேலம்: கொடநாடு கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சேலம் முக்கிய பிரமுகரை விரைவில் கைது செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களா கொடநாட்டில் உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இந்த எஸ்டேட்டிற்குள் நுழைந்த கும்பல் காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து உள்ளே புகுந்து ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச்சென்றது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் கனகராஜ், கேரள கூலிப்படையைச் சேர்ந்த சயான், வாளையாறு ரவி உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே கேரளாவிற்கு தப்பிச்செல்லும்போது நடந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் மகள் இறந்தனர். சயான் காயத்துடன் தப்பினார். ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த விபத்தில் மர்மமாக உயிர் இழந்தார். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் இறந்து வருவதால் சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உள்பட முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 350க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதற்கான ஆவணங்களை சேகரித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் வழக்கு விசாரணை மேலும் விறுவிறுப்படைந்துள்ளது. இதனிடையே சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முக்கிய பிரமுகருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த நபருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்ட கூலிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. இன்னும் ஓரிரு நாளில் அந்த முக்கிய நபர் கைது செய்யப்படுவார் என அதிமுக நிர்வாகிகள் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி சேலம் அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘கொடநாடு வழக்கில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் முக்கியமான நபர் கைது செய்யப்படுவார் என தெரியவந்துள்ளது’’ என்றார்.