சென்னை: மீலாது நபி திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள்:
ஆளுநர் ஆர்.என்.ரவி: அமைதியை உலகெங்கும் பரப்பிய முகமது நபி பிறந்த இத்திருநாளை நினைவுகூர்ந்து போற்றி மகிழ்வோம். அனைத்து மக்களும் இந்நன்னாளை மகிழ்வுடனும், பரஸ்பர அன்புடனும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: மகத்தான போதனைகளை அருளிய மாமனிதர் நபிகள் நாயகம் அவதரித்த திருநாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு மீலாதுன் நபி நல்வாழ்த்துகள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நபிகளாரின் போதனைகளிலிருந்து வழுவாமல் வாழ்ந்துவரும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் திமுகவுக்கு இருக்கும் ஆழமான பாச உணர்வுடன், இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகள்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: நபிகள் நாயகத்தின் பிறந்தநாளன்று, அவரது போதனைப்படி அன்பு பெருகவும், அமைதி தவழவும், சகோதரத்துவம் தழைக்கவும் உழைத்திட உறுதியேற்போம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இறைதூதர் நபிகள் நாயகத்தின் அருட் போதனையைப் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்பதை உணர்ந்து, கருணை பெருகவும், அமைதி நிலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் நாம் அயராது பாடுபடுவோம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: நபிகள் நாயகம் போதனைகளின்படி செயல்படுவதன் மூலம் வகுப்புவாத சக்திகளின் பிளவு அரசியலை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருடைய கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: உலகில் அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை வளர்வதற்கும், அனைத்து நலன்களும், வளங்களும் பெருகவும் உழைக்க இந்த நன்னாளில் நாம் உறுதியேற்போம்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: நபிகள் நாயகம் பிறந்த நாளில் சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க உறுதி கொள்வோம்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: அன்புதான் உலகில் ஆகப்பெரிய சக்தி என்பதை போதித்த நபி பெருமகனாரின் பிறந்தநாளில் உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் அனைவரிடமும் நிலைத்து நிற்கட்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: வாழ்க்கை முழுவதும் ஒழுக்கத்தை கடைபிடித்த நபிகள் நாயகத்தின் குணத்தை வளர்த்துக்கொள்ளும் இஸ்லாமியர்களின் வாழ்வு சிறப்பானதாகும். அவர்கள் மகிழ்ச்சியோடு, வளமுடன் வாழ வாழ்த்துகள்.
வி.கே.சசிகலா: இறைநபி பிறந்தநாளைக் கொண்டாடி மகிழும் இந்நன்னாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீலாதுன் நபி நல்வாழ்த்துகளை சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பாரிவேந்தர் எம்.பி: நபிகள் நாயகம் பிறந்த இந்நாளில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற மனித நேயமிக்க இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும் எனக் கூறி, மிலாதுன் நபி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், பாமக தலைவர் அன்புமணி, ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, தேசிய முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜி.ஜி.சிவா, இந்திய தேசிய லீக் மாநில பொதுச்செயலாளர் ஜகிருத்தீன் அஹமது,
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோரும் மீலாதுன் நபி திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்..