வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர் : பஞ்சாப் எல்லையில், பாகிஸ்தானில் இருந்து ‘ட்ரோன்’ வாயிலாக ஆயுதங்கள் கடத்தப்படுவதை முறியடித்து வரும் பஞ்சாப் போலீசார், ஐந்து பேரை கைது செய்து, ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பஞ்சாபில், எல்லை பகுதியில், பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் வாயிலாக, நம் பகுதிக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இவை, உள்நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு கடத்தி வரப்படும் ஆயுதங்களை, பஞ்சாப் மாநில போலீசார் மற்றும் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வாரத்தில் மட்டும் பல நவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இதில் சம்பந்தப்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, பஞ்சாப் போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பல்வாலா கிராமத்தைச் சேர்ந்த சுரீந்தர் சிங், அமிர்தசரசைச் சேர்ந்த சகோதரர்கள் ஹர்சந்த் சிங் மற்றும் குர்சாஹிப் சிங் ஆகிய மூன்று பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ௧.௦௧ கோடி ரூபாய், ௫௦௦ கிராம் ‘ஹெராயின்’ போதைப் பொருள், கைத்துப்பாக்கிகள், வெடி பொருட்கள் மற்றும் இரண்டு பணம் எண்ணும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ௫ம் தேதி, இந்த கும்பலைச் சேர்ந்த ஜஸ்கரன் சிங், இவரது உதவியாளர் ரத்தன்பீர் சிங் இருவரும் கைது செய்யப்பட்டு, இவர்களிடம் இருந்து ௨௭ கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிபட்ட ஜஸ்கரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு பாக்.,கில் உள்ள ஆசிப் என்பவருடன் தொடர்பு இருப்பதும், அவர் அங்கிருந்து போதைப் பொருள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை ட்ரோன் வாயிலாக அனுப்புவதை, ரத்தன்பீர் சிங் எடுத்து வருவதையும் ஒப்புக் கொண்டார்.
இந்த ஐந்து பேர் மீதும், பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement