சென்னை: சென்னைக்கு கனமழை எச்சரிக்கைவிடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு சாலைகளில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சம்அடைந்துள்ளனர். தமிழகத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்து வரும் நாட்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இதனிடையே மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டம்பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277 கோடியில் 60.83 கிமீ நீளத்துக்கும், வெள்ள நிவாரண நிதியின்கீழ் ரூ.295 கோடியே 73 லட்சத்தில் 107.57 கிமீ நீளத்துக்கும், உள்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27 கோடியே 21லட்சம் மதிப்பில் 10 கி.மீ. நீளத்துக்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8 கோடியே 26 லட்சத்தில் 1.05 கிமீ நீளத்துக்கும் மாநகரின் பிரதானபகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள், கான்கிரீட் போடுவதற்காக நிறுவப்பட்ட கம்பிகளும் அப்படியே கிடக்கின்றன. கனமழை தொடங்கும் நிலையில், இத்தகைய பள்ளங்களால் விபத்துகள் ஏற்படுமோ என வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். கனமழைக்கு முன்பாக பணிகளை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, மழைநீர் வடிகால் பணிகளில் சிங்கார சென்னைதிட்டப்பணிகள் முடியும் நிலையில் இருப்பதாகவும், வெள்ள நிவாரண நிதியின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் 59 சதவீதம், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் 88 சதவீதம், மூலதனநிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் 85 சதவீதம் முடிந்திருப்பதாக மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாசில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
தற்போது கனமழை தொடங்க உள்ள நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சி மேயர் பிரியாவிடம் கேட்டபோது, “சில இடங்களில் வடிகால் இணைப்பு பணிகள் மட்டும்தான் நிலுவையில் உள்ளது. முடிந்த வரை பருவமழை தொடங்குவதற்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. பருவமழை தொடங்கியபிறகு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறுத்தப்படும்” என்றார்.