`சத்தா சாப்பிடணும்…. அதே நேரம் டேஸ்ட்டும் புதுசா இருக்கணும்… அப்படி ஏதாச்சும் இருக்குமா…’ என தேடுவோரின் லிஸ்ட்டில் நீங்களும் இருக்கிறீர்களா? உங்களுக்காகத்தான் இந்த வெரைட்டி விருந்து… இதுவரை நீங்கள் சுவைத்திராத ருசியில், ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அசத்தலான அயிட்டங்களை இந்த வார வீக் எண்டுக்கு விருந்தாக்குங்களேன்….
அமிர்தப்பழம்
தேவையானவை:
பச்சரிசி – ஒரு கப் (200 கிராம்)
புளிக்காத தயிர் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 3
தண்ணீர் – இரண்டரை கப்
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
கல் உப்பு – ஒரு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – அரை டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பச்சரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு பச்சை மிளகாய், கல் உப்பு, பெருங்காயத்தூள், பச்சரிசி மற்றும் அரை கப் தயிர் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அத்துடன் அரைத்த மாவு, அரை கப் தயிர், இரண்டரை கப் தண்ணீர் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து அடுப்பை மிதமான, சீரான சூட்டில் வைத்துக் கலக்கவும். சுமார் 20 நிமிடங்களில் மாவு பந்து போல வந்த பிறகு இறக்கவும்.
ஒரு சதுரமான, எண்ணெய் தடவிய தட்டில் இந்த அமிர்தப்பழத்தைப் பரப்பிவிடவும். சூடு ஆறிய பிறகு சதுரமாக வெட்டவும்.அமிர்தப்பழத்தை மாங்காய் மற்றும் வெங்காய ஊறுகாயுடன் பரிமாறவும். இது மணமும் சுவையும் மிகுந்தது.
குறிப்பு: பாரம்பர்ய உணவுப் பட்டியலில் அமிர்தப்பழமும் நிச்சயம் இடம்பெறும்.
மாங்காய் அடை
தேவையானவை:
மாங்காய் – ஒன்று (துண்டுகள் போடவும்)
பச்சரிசி – ஒரு கப் (200 கிராம்)
காய்ந்த மிளகாய் – 7
இஞ்சி – சிறிய துண்டு
உருளைக்கிழங்கு – ஒன்று (தோல் சீவி, துருவவும்)
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் – அரை கப்
கல் உப்பு – முக்கால் டேபிள்ஸ்பூன்
செய்முறை
பச்சரிசியைக் கழுவி வெந்நீரில் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். காய்ந்த மிளகாய், இஞ்சி, மாங்காய்த் துண்டுகள், தேங்காய்த் துருவல், பச்சரிசியை கிரைண்டரில் கொரகொரப்பாக அரைத்து உப்பு போட்டுக் கலக்கி எடுக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய உருளைக்கிழங்கை மாவில் கலக்கவும்.
முதல் நாள் மாலை அரைத்து வைத்தால், மறுநாள் காலை அடை வார்க்கலாம். சுவையான மாங்காய் அடையைத் தக்காளிச் சட்னி அல்லது ஊறுகாயுடன் சூடாகப் பரிமாறவும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாங்காய் அடையை ருசித்துச் சாப்பிடுவார்கள்.
பீட்ரூட் அடை
தேவையானவை – அரைக்க:
புழுங்கல் அரிசி – ஒரு கப்
துருவிய பீட்ரூட் – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 5 – 6
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் – அரை கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 கைப்பிடி அளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு
செய்முறை:
புழுங்கல் அரிசியைக் கழுவி 2 முதல் 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், அரிசியை ஒன்றாகச் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். கடைசியாக துருவிய பீட்ரூட் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து உப்பு சேர்க்கவும்.
இதை 8 மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து இதை பீட்ரூட் அடை மாவில் சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிதளவு பீட்ரூட் அடை மாவை ஊற்றி கனமான அடையாக வட்டமாகப் பரப்பவும்.சுற்றிலும் அரை டீஸ்பூன் எண்ணெய்விட்டு மேலே ஒரு மூடியால் மூடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுத்து தக்காளிச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
கறுப்பு உளுந்து அடை
தேவையானவை:
பச்சரிசி – 250 கிராம்
தேங்காய் – அரை மூடி (துருவவும்)
கறுப்பு உளுந்து – 60 கிராம்
காய்ந்த மிளகாய் – 3
சீரகம் – அரை டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
இஞ்சி – அரை இன்ச் துண்டு (தோல் சீவவும்)
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும் கறுப்பு உளுந்தையும் ஒன்றாகக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். கிரைண்டரில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு கழுவிய அரிசி – உளுந்து சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, பிறகு அதில் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் அரைத்தெடுக்கவும்.
இதை எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு அடை மாவில் சிறு துண்டுகளாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். நன்றாகக் கலக்கிக்கொள்ளவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்).
தோசைக்கல்லை அடுப்பில் காயவைத்து மாவைச் சற்று கனமாகவும், அதேவேளையில் சிறிதாகவும் தோசையாக வார்த்து, எண்ணெய்விட்டு மூடிவைத்து சுடவும்.
இந்த அடைக்கு, பச்சை மிளகாய்ச் சட்னி தொட்டுக்கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.