ஒற்றைத் தலைமை விவாகரத்துக்கு பின்னர், ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனது ஆளுமையை நிலைநிறுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதேபோல, பன்னீரும் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதன்படி, எடப்பாடி தலைமையின் அதிருப்தி நிர்வாகிகளுடன் பேசி வருகிறார் பன்னீர்.
அதேபோல, சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்து ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அக்டோபர் 17-ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அதன்படி, சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள, அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் வரும் அக்.10-ம் தேதி மாலை 4.30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், “இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வான பின்னர், அவர் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் முதல் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இதுதான். வழக்கமாக சட்டமன்ற கூட்டம் நடக்கும் முன்பாக, தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை கூட்டம் நடக்கும்.
அதன்படி, மா.செ-க்களை இணைத்து தற்போது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தொகுதி மக்களின் கோரிக்கையை எல்லா எம்.எல்.ஏக்களும் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பி.எஸ்ஸை நீக்கிவிட்டு ஆர்.பி.உதயகுமாரையும், துணை கொறடா பதவியிலிருந்து மனோஜ் பாண்டியனை நீக்கிவிட்டு, அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை சபாநாயகர் ஒப்புக் கொள்ளாமல் இழுத்தடிக்கிறார். அதற்கான முன்னெடுப்புகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசப்படவுள்ளது. ஒருவேளை தேர்தல் ஆணையத்தின் முடிவை சபாநாயகர் எதிர்பார்த்து, ஓபிஎஸ்ஸை பதவியில் இருந்து நீக்காமல் இருக்கும்பட்சத்தில், ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோர் சட்டமன்றத்தில் வந்தால் அவரை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
அதேபோல, அக்டோபர் 17-ம் தேதி அ.தி.மு.க-வின் பொன்விழா ஆண்டு நிறைவு நாள். இதற்கான மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்த தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக மா.செ.க்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. குறிப்பாக, தி.மு.க அரசு தொடுக்கும் வழக்குகளை சமாளிக்க ஏதுவாக, புதிய வழக்கறிஞர் குழு அமைப்பது குறித்தும், வழிகாட்டுதல் குழுவை மாற்றியமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. அதேபோல, பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்தும் பேசவுள்ளார் எடப்பாடி ” என்றனர் விரிவாக.