குர்கிராம்: குர்கிராமில் இஸ்திரி போட்டதற்கு பணம் வசூலிக்க சென்ற 15 வயது சிறுமி 45 வயதுடைய தனியார் நிறுவன ஊழியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அரியானா மாநிலம் குர்கிராம் அடுத்த கந்த்சா கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நூர் முகமது (45). இவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த பெண்ணின் இஸ்திரி கடைக்கு சென்று, தனது துணிகளுக்கு இஸ்திரி போட்டுக் கொடுக்கும்படி கேட்டார். அதன்படி அந்த பெண்ணும் நூர் முகமதுவின் துணிகளுக்கு இஸ்திரி போட்டுக் கொடுத்தார். அதற்கான கூலியை நூர் முகமதுவிடம் ேகட்டபோது, அவர் தனது வீட்டிற்கு வந்து வாங்கிக் கொள்ளும்படி கூறினார்.
அதையடுத்து தனது 15 வயது மகளை, பணம் வாங்கி வருவதற்காக நூர் முகமதுவின் வீட்டிற்கு அந்தப் பெண் அனுப்பி வைத்தார். அப்போது அந்த சிறுமியை நூர் முகமது பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அந்த சிறுமியிடம், பாலியல் பலாத்கார சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக எச்சரித்து அனுப்பி வைத்தார். அதனால் அந்த சிறுமியும் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லவில்லை. அடுத்த சில வாரங்களில் சிறுமியின் தாயார், தனது உறவினரை பார்ப்பதற்காக வெளியூர் சென்றிருந்தார். அதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட நூர் முகமது, வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார்.
ஏற்கனவே மிரட்டியது போன்று மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். வெளியூர் சென்ற சிறுமியின் தாயும் வீடு திரும்பினார். இந்த நிலையில் தனது வயிறு வலிப்பதாக, தாயிடம் சிறுமி கூறினார். அதையடுத்து தனது மகளை மருத்துவரிடம் அந்தப் பெண் அழைத்து சென்றார். மருத்துவர்களின் பரிசோதனையில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த தாய், தனது மகளிடம் நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அவர்கள் நூர் முகமது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.