திண்டுக்கல்: திண்டுக்கல் வேடப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள ஒத்தக்கண் ரயில் சப்வே பால சாலையின் இருபுறமும் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. கழிவுநீர் செல்லவும் வாறுகால் முறையாக அமைக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவற்றை சரிசெய்து பாலத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் வேடப்பட்டி அருகே, ஆங்கிலேயர் காலத்தில் ஒத்தக்கண் ரயில் சப்வே பாலம் கட்டப்பட்டது. இதன் வழியை அரசு மருத்துவக் கல்லூரி, வேடப்பட்டி, வி.கல்லுப்பட்டி, நரசிங்கபுரம், ஏ.வெள்ளோடு போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பாலத்தின் இருபுறமும் ரோடு மிகவும் மோசமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும் மழைக்காலங்களில் மழை நீருடன், கழிவுநீரும் சேர்ந்து 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதில் பொதுமக்கள் கடந்து செல்ல முடியாமல் மாற்று பாதையை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டிய அவலநிலை பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் பாலத்தின் அடிப்பகுதியில் கழிவுநீர் வாறுகால் முறையாக இல்லை.
அதனால் பல நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. அதேபோல் பாலம் குறுகிய நிலையில் உள்ளது. இதில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த பாலத்தின் அகலத்தை அகலப்படுத்தி, ரோட்டை சீரமைக்க வேண்டும். கழிவுநீர் நீர் தேங்காமல் செல்வதற்கு புதிய வழி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.