கரூர்: காவிரி ஆற்றில்மூழ்கிய சகோதரர்களில் தம்பி சடலம் மீட்கப்பட்ட நிலையில் அண்ணன் சடலம் இன்று மீட்கப்பட்டது.
திண்டுக்கல் மதுரை வீரன் கோயில் தெரு பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் மகன் புருஷோத்தமன் (18) பிளஸ் 2 முடித்துள்ளார். திண்டுக்கல் ராணி மஙகம்மாள் காலனியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் மனைவி மகேஸ்வரி (44). இவர்கள் மகன் விஷ்வா (24). பி.இ. படித்துள்ளார். மகேஸ்வரியும், ஜெகநாதனின் மனைவியும் சகோதரிகள்.
கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள கொம்பாடிபட்டியில் உள்ள குல தெய்வ கோயிலில் வழிபாடு செய்வதற்கு இரு குடும்பத்தினரும் லாலாபேட்டைக்கு நேற்று வந்தனர். முன்னதாக லாலாபேட்டை காவிரி ஆற்றில் அனைவரும் குளித்த நிலையில் புருஷோத்தமன், விஷ்வா இருவரும் காவிரி ஆற்றில் மூழ்கினர்.
ஆற்றில் மூழ்கிய இருவரையும் தேடிய அப்பகுதி இளைஞர்கள் புருஷோத்தமனை சடலமாக மீட்டனர். கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை வீரர்கள் நேற்று மாலை வரை தேடியும் விஷ்வா கிடைக்காத நிலையில் இரவானதால் தேடும் பணியை நிறுத்தினர். லாலாபேட்டை போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து புருஷோத்தமன் சடலத்தை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று (அக். 9) காலை கரூர் தீயணைப்பு வீரர்கள் விஷ்வாவை தேடிய நிலையில் லாலாபேட்டையிலிருந்து நான்கைந்து கி.மீட்டர் தள்ளி வதியம் கீழகுறப்பாளையம் காவிரி ஆற்றில் விஷ்வாவை சடலமாக காலை 10 மணிக்கு மீட்டனர். லாலாபேட்டைபோலீஸார் சடலத்தைக் கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.