மும்பை: மலேசியாவில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.2.9 கோடி மதிப்பிலான 665 வெளிநாட்டு விலங்குகளை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியாவில் இருந்து மும்பைக்கு தொட்டியில் வைத்து வளர்க்கக் கூடிய மீன்கள் என்ற போர்வையில் வெளிநாட்டு விலங்குகள் கடத்தி வந்துள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து வைல் பார்லே மேம்பாலத்தில் வாகன சோதனையிட்ட அதிகாரிகள், வெளிநாட்டு விலங்குகளை கடத்திச் சென்ற வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். அந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில், 30 பெட்டிகள் இருந்தன.
இவற்றில், 16 பெட்டிகளில் பல்வேறு வகையான அலங்கார மீன்கள் மற்றும் 13 பெட்டிகளில் ஆமை, ஆமை, மலைப்பாம்பு, பல்லி, உடும்பு போன்ற விலங்குகள் என மொத்தம் 665 விலங்குகள் இருந்தன. ஆனால், 548 விலங்குகள் மட்டுமே உயிருடன் இருந்தன; 117 விலங்குகள் இறந்து கிடந்தன. இவ்விவகாரம் தொடர்பாக மஜ்கான் பகுதியைச் சேர்ந்த விக்டர் லோபோ (36), தாராவியைச் சேர்ந்த இம்மன்வேல் ராஜா (36) ஆகியோர் மீது வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கூறுகையில், ‘மலேசியாவில் இருந்து மும்பைக்கு வளர்ப்பு மீன்கள் என்ற போர்வையில் கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.2.9 கோடி மதிப்புள்ள 665 விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்றனர்.