திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மழைநீர் வடிகால்வாய், கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், வரத்து கால்வாய்களை சீரமைக்கவும் மழைநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சென்னை உள்பட பல இடங்களில் நடைபெற்றுவரும் கால்வாய் அமைக்கும் பணியை முதல்வர் பார்வையிட்டு பணிகளை துரிதமாக முடிக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மழைநீர், கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள், வரத்து கால்வாய்கள், மழை நீர் வடிகால்வாய்களை சீரமைக்க நீர்வளத் துறை தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
திருவள்ளூர் கோட்டத்துக்கு உட்பட்ட பெரும்பாக்கம் கால்வாய், தாய்க் கால்வாய், புட்லூர் ஏரிக்கு செல்லும் கால்வாய், திருவள்ளூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மழைநீர் கால்வாய் ஆகியவற்றை சீரமைக்க ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரும் பணிகள் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணிகளால் இனி வரும் காலங்களில் சாலைகளில் மழை நீர் தேங்குவது தடுக்கப்படும். கழிவுநீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவது இருக்காது.இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட நீர்வளத் துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.