'என்னை தூங்க விடுங்கப்பா'… தூக்கம் இழந்த மு.க. ஸ்டாலின்… கதறவிட்ட மூத்த அமைச்சர்கள்

திமுகவின் பொதுக்குழு இன்று சென்னை அமைந்தகரையில் நடந்தது. இதில் மு.க. ஸ்டாலின் போட்டியின்றி அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்கிறார். அதேபோல், மகளிரணி செயலாளராக இர்நுத கனிமொழி துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருபக்கம் திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் குவிந்தாலும் அவர் பொதுக்குழுவில் பேசிய ஒரு விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பொதுக்குழுவில் பேசிய அவர், “மழையே பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள்; மழை அதிகமாக பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். ஒரு பக்கம் திமுக தலைவர்; இன்னொரு பக்கம் தமிழ்நாடு முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கங்களும் அடி என்பதைப்போல் இருக்கிறது என்னுடைய நிலைமை.

 

என்னை துன்புறுத்துவதுபோல் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் செயல்படக்கூடாது. நாள்தோறும் கட்சிக்காரர்கள் யாரும் புது பிரச்னையை உருவாக்கியிருக்கக்கூடாது என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் தூங்கவிடாமலும் செய்கிறது” என்றார்.

முன்னதாக, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, ஓசி பஸ்லதானே போறீங்க என பேசியிருந்தது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திராவிட மாடல் என்பதுதான் இதுதானா எனவும் பலர் கேள்வி எழுப்பினர். அதேபோல் ஆ.ராசா மனுதர்மம் குறித்து பேசியதும் சர்ச்சையானது. அதேசமயம் ஆ. ராசா பேசியது அரசியல் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் பொன்முடி பேசியதோ பொதுமக்கள் புழங்கும் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பொன்முடி மட்டுமின்றி கே.என். நேரு போன்றோரு மேயர் உள்ளிட்டோரை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக வைக்கப்படுகிறது. இதனால் திமுகவின் மீது பலர் விமர்சனத்தை வைக்க தொடங்கினர். முதலமைச்சரும் கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியானது.

இதனை ஆரம்பத்திலேயே களை எடுக்கவில்லை என்றால் விளைவு மோசமாகிவிடும் என்பதை உணர்ந்துகொண்டதால்தான் மு.க. ஸ்டாலின் இன்று இவ்வாறு பேசியிருக்கிறார் என கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதேசமயம், திமுக ஆட்சிக்கு வந்தால் பாஜகவினர் கதறுவார்கள் என்று பார்த்தால் அமைச்சர்களால் முதலமைச்சரே கதறுகிறார் எனில் இதன் மூலமே நடக்கும் ஆட்சியின் நிலையை புரிந்துகொள்ளலாம் என எதிர்க்கட்சியினர் கூற ஆரம்பித்திருக்கின்றனர். மேலும் ஸ்டாலின் பேசும் வீடியோவை நெட்டிசன்ஸ் அதிகம் பகிர்ந்தும் வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.