கர்நாடகா: இந்திய ஒற்றுமை யாத்திரையின் முடிவில் ராகுல் காந்தி ஒரு புதிய அவதாரமாக பார்க்கப்படுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒற்றுமை யாத்திரையை கடந்த மாதம் ராகுல் காந்தி கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தொடங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் யாத்திரையை தொடங்கிவைத்தார். ஒருமாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில் ராகுல் தற்போது கர்நாடகாவில் யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் கர்நாடகாவில் ராகுல் காந்தி 19 நாட்களுக்கு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்நிலையில் கர்நாடகாவில் செய்தியாளர்களை சந்தித்த திக் விஜய் சிங், “இந்திய ஒற்றுமை யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்து வருகிறது. நீண்ட காலத்திற்குப் பின்னர் முதன்முறையாக காங்கிரஸ் கட்சி பட்டித்தொட்டியெல்லாம் கொண்டு சேர்க்கப்படுகிறது.
இந்த தேசத்தில் தியாகம் செய்பவர்கள் கொண்டாடப்படுவர். சோனியா காந்தி பிரதமர் பதவியை தியாகம் செய்தார். ராகுல் காந்தி வெயிலிலும் மழையிலும் நடக்கிறார். அவருக்கு எதிராக பரப்பப்படும் போலி செய்திகளையும், அவதூறுகளையும் எதிர்க்கிறார். அவர் இந்திய ஒற்றுமையின் அடையாளமாக உருவெடுத்துள்ளார். எனக்கு ராகுல் காந்தியை நீண்ட காலமாகத் தெரியும். அவர் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் அவரை யாராலும் தடுக்கவே முடியாது. இந்த யாத்திரையின் முடிவில் அவரை ஒரு புதிய அவதாரமாக நீங்கள் பார்ப்பீர்கள். அதை அவர் அடைவதற்கு எதுவும் தடையாக இருக்க முடியாது. அந்த அவதாரத்தை அவர் எடுக்கும் நாள் வரும்போது யாராலும் அவரை தடுத்து நிறுத்த முடியாது.
ராகுல் காந்தி தான் கொண்ட கொள்கைகள் மீது தீரா பற்று கொண்டவர். அவர் தேடல்களுக்கு விடை கிடைக்காத வரை அவர் தளர மாட்டார். சிறந்த ஆன்மிகவாதியும் கூட. ஒரு அமைப்பாக பாஜகவையும் காங்கிரஸையும் ஒப்பிட்டால் பாஜகதான் இப்போதைக்கு பலமாக இருக்கிறது. ராகுல் காந்தியின் நடைப்பயணம் மக்களை ஈர்த்துள்ளது. கொள்கைக்கும், தலைமைக்கும் ஒத்துழைக்கும் போக்கும் இப்போது கட்சிக்குள் குறைவாக இருக்கிறது. இந்த யாத்திரை கட்சியை வலுப்படுத்தும்” என்றார்.