உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியின் குராவலி பகுதியில், மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமி, அச்சம் காரணமாக அதை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சிறுமி வயிற்றுவலியால் அவதிப்பட்டிருக்கிறார். அவரை குடும்பத்தார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து குடும்பத்தார் சிறுமியிடம் விசாரித்ததில் அதே கிராமத்தை சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததை தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர், ஊர் பஞ்சாயத்தின் முன்னால் அபிஷேக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசியிருக்கிறார். ஊர் பஞ்சாயத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அபிஷேக்-கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்திருக்கிறது. குற்றவாளியின் தாயார் பாதிக்கப்பட்ட பெண்ணை, திருமணம் செய்து வைப்பதாகக் கூறி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, கர்ப்பிணிச் சிறுமி மீது பெட்ரோலைத் தெளித்து தீ வைத்திருக்கிறார்.
அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். சிறுமிக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸார் 3 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து ஐபிசி 307, 376 மற்றும் போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளை தேடி வருவதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.