மேட்டூரில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாதிரியாரை மீண்டும் தேவாலயத்தில் பணியமர்த்த எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியதால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதையடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் தூய மரியன்னை கிறிஸ்துவ ஆலயம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பங்காளர்களாக உள்ளனர். இந்த ஆலயத்தில் 4- வருடத்திற்கு மேலாக குருசடி சகாயராஜ் (55) என்பவர் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் ஆலயத்திற்கு வந்த பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருப்பதாக கூறி புகார் எழுந்தது. இதனை அடுத்து சேலம் மறை மாவட்ட ஆயர் ராயப்பன், குற்றச்சாட்டுக்கு ஆளான பாதிரியார் குருசடி சகாயராஜுக்கு விடுப்பு அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இதனையடுத்து குற்றச்சாட்டுக்கு ஆளான பாதிரியார் மீண்டும் அதே ஆலயத்திற்கு பணியில் நியமிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய மரியன்னை ஆலயத்திற்கு முன்பு கிறிஸ்தவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாதிரியாருக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினர், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேட்டூர் போலீசார் இருதரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் .
இதனையடுத்து ஆலயத்தின் பங்கு மக்கள் சார்பாக மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் மீண்டும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாதிரியார் பணியமர்த்தப்பட்டால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர் மேட்டூர் தூய மரியன்னை ஆலயத்தில் பணியாற்றக் கூடாது என புகார் மனு அளித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM