புதுச்சேரி: மக்கள் குறைகளை நேரடியாக எடுத்துரைக்கலாம் என்ற ஆளுநர் தமிழிசையின் அறிவிப்பு மக்களால் தேர்வான ஆட்சிக்கு ஒரு இணை அரசாங்கம் நடப்பது போன்ற சூழலை உருவாக்கும். இது மக்களால் தேர்வான அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஆளும் கூட்டணியிலுள்ள அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கட்சித் தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ”புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநரின் பங்களிப்பு என்பது நாளுக்கு நாள் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மக்கள் நலம் மற்றும் நிர்வாகம் சார்ந்த துணைநிலை ஆளுநரின் தொடர் அறிவிப்புகள் புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு இணை அரசாங்கம் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகிறது.
இந்நிலையில் மக்களின் குறையை நேரடியாக துணைநிலை ஆளுநரிடம் எடுத்துரைக்கலாம் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அதன் அடிப்படையில் மக்களுடைய குறைகளை நேரடியாக துணைநிலை ஆளுநர் அவர்கள் கேட்டறிகிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு பின்னடைவையும், அவமரியாதையும் ஏற்படுத்தக்கூடிய செயலாகும். ஆட்சியாளர்களின் பல்வேறு தவறுகளை பாதிக்கப்பட்டவர்கள் துணைநிலை ஆளுநரிடம் முறையிடுவது என்பது மறைமுகமாக இருக்கும் ஒரு நிகழ்வாகும். அதையே பொது அறிவிப்பின் மூலம் என்னிடம் உங்கள் குறைகளை கூறுங்கள் என ஒரு அறிவிப்பை வெளியிட்டு செயல்படுத்துவது என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சிக்கு ஒரு இணை அரசாங்கம் நடப்பது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கும்.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக பணிபுரிந்த கிரண்பேடி, காவல்துறையின் அதிகாரியாக இருந்து துணைநிலை ஆளுநர் பதவிக்கு வந்தவர். ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு மதிப்பளிப்பதும் அரசின் நிர்வாகத்தில் தேவையற்ற குறுக்கீடுகள் பற்றியும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் தற்போதைய துணைநிலை ஆளுநர் தமிழிசை பாரம்பரிய அரசியலில் குடும்பத்தில் பிறந்து தமிழகத்தில் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்தவர். அப்படிப்பட்டவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு நெருடலை ஏற்படுத்துகின்ற விதத்தில் மக்கள் குறை கேட்டு என்ற பெயரில் ஒரு இணை அரசாங்கத்தை நடத்துவது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். ஆளுநரின் மக்கள் சந்திப்பு ஜனநாயகத்துக்கு எதிரானது. புதுச்சேரி நகரப்பகுதியில் 20 கிலோ மீட்டர் வேகத்தில் கூட செல்லமுடியாத சூழல் நிலவும் நிலையில் நகர பகுதியில் ஹெல்மெட் அவசியமில்லை.” என்று குறிப்பிட்டார்.