கம்பம்: கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் குடிமகன்கள் அட்டகாசத்தை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நீர்வரத்து குறையும். இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாபயணிகளிடம் வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரத்தில் பண்டிகை கால விடுமுறை மற்றும் பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால், சுருளி அருவிக்கு தமிழகத்தில் பல்வேறு ஊர்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் சுருளி அருவியில் குளிக்கும் போது தக்க பாதுகாப்பு இன்றி தவிக்கின்றனர். ஆண்களும் ,பெண்களும் அடுத்தடுத்து நின்று குளிப்பதால் குடிமகன்கள் அருவியில் குளிக்கும் போது விசிலடிப்பது, கூச்சல் இடுவது, கிண்டல் செய்வது அத்துடன் ஜட்டியுடன் குளிப்பது என அராஜகம் செய்கின்றனர்.
வனத்துறை சார்பில் அருவி பணியில் உள்ள தற்காலிக பணியாளர் இது போன்ற செயலில் ஈடுபட கூடாது என எடுத்து கூறினாலும், பெரும்பாலான குடிமகன்கள் கேட்பதில்லை. இதனால் வெளியூரிலிருந்து குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அச்சத்துடன் குளித்து செல்கின்றனர். இது போன்ற செயல்களை தடுப்பதற்காக சுருளி அருவியில் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் இருந்து சுருளி அருவியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு போலீசாருக்கு என தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த கொரோனா காலத்தில் இருந்து ராயப்பன்பட்டி போலீசார் சுருளி அருவி பாதுகாப்பு பணிக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. சுருளி அருவியில் புறக்காவல் நிலையம் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டால் தான், இதுபோன்ற தகாத செயல்களை தடுக்க முடியும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.