கைது அடக்குமுறைகளை கைவிடுங்கள் – அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் சீமான்

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பணி நீக்கம் செய்ததை எதிர்த்து அறவழியில் போராடிய அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை நள்ளிரவில் காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி கைது செய்துள்ள தமிழ்நாடு அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டிலுள்ள 52 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்த பகுதிநேர விரிவுரையாளர்களைத் தொகுப்பூதியம் என்ற பெயரில் கடந்த பத்தாண்டிற்கும் மேலாக அவர்களின் உழைப்பினை உறிஞ்சிவிட்டு, தற்போது பணிநீக்கம் செய்து வெளியேற்றியிருப்பது அவர்களது வாழ்வாதாரத்தை அழித்து வறுமையில் தள்ளும் கொடுஞ்செயலாகும்.

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால், முறைப்படி கல்வித் தகுதி ஆய்வு செய்யப்பட்டுப் பணி நிரந்தரம் என்ற உறுதிமொழியுடன் தற்காலிக விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்ட 2600க்கும் மேற்பட்ட முதுநிலை பொறியியல் பட்டதாரிகளில், ஏறத்தாழ 1060 பேரைக் கடந்த 2019ஆம் ஆண்டு அன்றைய அதிமுக அரசு பணி நிரந்தரம் செய்து அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், ஆட்சிக்கு வந்தால் மீதமுள்ள 1311 விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்து, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அதிகாரத்தை அடைந்த திமுக, தற்போது அவர்களைப் பணிநீக்கம் செய்து வயிற்றில் அடித்திருப்பது அப்பட்டமான பச்சைத் துரோகமாகும்.

ஒரே அரசின் கீழ், ஒரே வகையான பணியில் சேர்ந்து பத்தாண்டுகளாகப் பணிபுரிந்து வந்த தற்காலிக விரிவுரையாளர்களில் பாதிபேரை பணிநிரந்தரம் செய்துவிட்டு, மீதமுள்ளவர்களைப் பணி நீக்கம் செய்வதென்பது எவ்வகையில் நியாயமாகும்? போற்றுதலுக்குரிய அறப்பணியான அறிவு புகட்டும் ஆசிரியர் பணி செய்தவர்களை, கொடுங்குற்றவாளிகள் போல் நள்ளிரவில் இழுத்துச் சென்று கட்டாயப்படுத்தி கைது செய்துள்ளது கொடுங்கோன்மைச் செயலாகும்.

ஆகவே, கைது செய்யப்பட்டுள்ள தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் அனைவரையும் உடனடியாக மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

தங்களின் வாழ்வாதார உரிமைக்காக அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து கோரிக்கைகள் வெல்லும்வரை துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.