திமுகவுக்கு பாஜக ‘மெகா பரிசு’; அர்ஜூன் சம்பத் போர்க்கொடி!

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவின் துணை பொதுச் செயலாளராகவும், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினராகவும் உள்ள கனிமொழிக்கு மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் நிலைக்குழு தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமல்லாமல் சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்க கடலில் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கும் முதல் கட்ட அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது.

மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் இந்த 2 விவகாரங்களும் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட் பரிசாக கருதி திமுகவினர் குதூகலித்து வருகின்றனர்.

அதே சமயம் இந்த விவகாரத்தில், ‘திட்டுபவனுக்கு அள்ளி கொடுப்பதா?’ என்கிற கோணத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பாஜகவுக்கு எதிராக வசைமாரி பொழிந்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழகம் மட்டும் மல்லாமல் அகில இந்திய அளவில் பாஜகவுக்கு ஏதாவது பிரச்சனைகள், விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டு என்றால் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் எதிர்ப்பு குரல் எழுப்புவதற்கு முன்பாகவே குரல் கொடுத்து வருபவர், ‘இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்’.

இவ்வாறு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த அர்ஜூன் சம்பத் திடீரென கண்டித்து பேசி இருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சியில் பாஜக உறைந்துபோய் உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

வள்ளலாருக்கு விழா நடத்தி பெருமைப்படுத்தும் தமிழ்நாடு அரசு, ஜீவகாருண்ய கொள்கை, மது விலக்கு, புலால் மறுத்தல் மற்றும் பசிப்பிணி போக்குதல் ஆகிய கொள்கைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்து என்கிற வார்த்தை மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு தவறான புரிதல் இருக்கிறது. யாரும் ஒன்றுபடக் கூடாது என்று, கருதும் திருமாவளவனை வன்மையாக கண்டிக்கிறேன்.

மின்கட்டண உயர்வு பிரச்னையை திசை திருப்ப

, எம்.பி ராஜாவை வைத்து இந்து மக்களை அவமதித்து, ஆபாசமாக பேச வைக்கின்றனர். இந்து மதம் பற்றி கேவலமாக பேசிய எம்.பி ராஜாவை கைது செய்யாமல் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகின்றனர்.

எம்.பி கனிமொழிக்கு பஞ்சாயத்து ராஜ் நிலைக் குழுத்தலைவர் பதவி வழங்கியதையும், கடலில் 88 கோடி ரூபாய் மதிப்பில் கருணாநிதி நினைவு பேனா சின்னம் அமைப்பதற்கும் முதல் கட்ட அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டிக்கிறோம்.

இந்து சமய அறநிலையத் துறை உயர்மட்டக் குழுவில் அரசியல்வாதிகள், ஆன்மிகத்திற்கு எதிரானவர்கள் மற்றும் மாற்று மதத்தினரை நியமனம் செய்தது தவறு என்பதால் அதை மாற்ற வேண்டும். இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.

இது நாள் வரை பாஜகவுடன் நகமும், சதையுமாக இருந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் திடீரென போர்க்கொடி தூக்கி இருப்பது கட்சியின் தேசிய தலைமையை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.