திருப்பூர்: நாட்டின் நிதியமைச்சர் மயிலாப்பூருக்குச் சென்று சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை விலை என்ன? என்று கேட்டால் விலைவாசி பிரச்சினைக்கு தீர்வு கிட்டாது என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்தார்.
திருப்பூர் மாவட்டம் வருகை தந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் காங்கயம் அருகே குட்டப்பாளையத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ”கொங்கு பகுதியில் காங்கேயம் மாடுகளை பல விவசாயிகள் வளர்ப்பதற்கும், பால் உற்பத்தியை பெருக்குவதற்கும் இன்னும் தமிழக அரசு ஊக்கம் தரம் வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.
பாரம்பரிய இனங்களை பாதுகாக்கும் முயற்சிகளை, பாரம்பரிய மாடுகள் மட்டுமின்றி, மரங்கள், காய்கறி வகைகள் இவற்றை ஊக்கப்படுத்த வேண்டும். நமது பாரம்பரியமான எண்ணங்களை எல்லாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு மைய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றது. இந்தியாவில் வட்டி விகிதத்தை குறைவாக உயர்த்துவதால், நூறு பில்லியன் டாலர் அந்நியச் செலாவணியை ரிசர்வ் வங்கி விற்றுள்ளது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
நான்கு விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும், வளர்ச்சி குறையும், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.5க்கு வராது. இந்தியாவின் வளர்ச்சி 6.5 என உலக வங்கி கூறிய பிறகு அதை அரை மனதோடு மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. அதுவும் மிகக் கடினம். வளர்ச்சி குறைந்து விலைவாசி உயரும். அதை ரிசர்வ் வங்கி கவர்னரும் ஒப்புக் கொள்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று ஒப்புக்கொள்கிறார்கள். மேலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாகிறது. கடந்த ஆறு மாதத்தில் தங்க இறக்குமதி மட்டும் ரூ.2000 கோடி டாலர், அதாவது ரூ.160 ஆயிரம் கோடி. இதனால் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். அடுத்த 12 மாதங்கள் மகிழ்ச்சியான எதிர்காலம் என்று சொல்ல முடியாது. இதில்தான் மத்திய அரசு சமயோசிதமாக, புத்திசாலித்தனமாக கலந்தாலோசிப்பவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். சென்னை மயிலாப்பூரில் சென்று நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை விலை என்ன? என்று கேட்பது மட்டும் இதற்கெல்லாம் தீர்வாகாது.
டாலருக்கு நிகராக, நமது ரூபாயை நிலையாக வைத்துக் கொள்ள ஏற்கெனவே ஜப்பான் நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியன கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதால், விலை உயரலாம். ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், உயராவிட்டாலும் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும், பணவீக்க விகிதமும், ரூபாயின் மதிப்பும் சரிவதும், நாட்டின் பணவீக்க விகிதத்தை அதிகப்படுத்தும். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஒரு வெற்றிப் பயணம். இந்த யாத்திரை அவரவர் வீடுகளில் முடங்கிக் கிடந்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அபிமானிகளை வீட்டை விட்டு வெளியில் வர வைத்துள்ளது. சாதாரண மக்கள் ஜோடோ யாத்திரை நடைபெறும் வழியெங்கும் இரு பக்கமும் நின்று வரவேற்கிறார்கள். மலர் தூவுகிறார்கள், இதிலிருந்து கன்னியாகுமரியில் இருந்து புதிய ஆர்வம், புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இன்னும் 130 நாட்கள் உள்ள நிலையில் இந்த யாத்திரைக்கு மேலும் மேலும் பலம் கூடும், பலம் குறையாது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே குட்டப்பாளைத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பார்வையிட்டார். அவரை திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்றார். அங்கு, திமுக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் பொன்னாடை வழங்கி சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து ஆராய்ச்சி மையம், அதன் பணிகள் மற்றும் காங்கயம் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக உள்ள காடுகள் குறித்தும், காங்கயம் கால்நடைகளின் சிறப்பு, இனப் பெருக்கம் குறித்தும் ப.சிதம்பரத்துக்கு அவர் எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து அவர் இனப் பெருக்கக் காளையான பூச்சிக் காளையையும் பார்வையிட்டார்.