அப்பாவுக்குத் தெரியாமல் ஒரு கம்பெனியை ஆரம்பித்து, அதை நன்றாக நடத்தி, பிற்பாடு அப்பாவின் கம்பெனியையே வாங்கி இருக்கிறார் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் சக்தி ஆர்.கண்ணன்.
மருந்து தயாரிப்பு, போட்டோ பிலிம் எனப் பல வகையான தொழிற்சாலைகளில் தேவைகளில் உலோக உப்புகள் எனப்படும் மெட்டாலிக் சால்ட் தயாரிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்த மெட்டாலிக் சால்ட் தயாரிப்பில் மும்பையை சேர்ந்த சக்தி ஆர். கண்ணன் கொடி கட்டிப்பறக்கிறார். அவருடன் நாம் சந்தித்துப் பேசினோம்…
நெல்லை டு மும்பை…
கண்ணன் இத்தொழிலுக்கு எப்படி வந்தார் என்பது குறித்து அவரை நேரில் சந்தித்துப் பேசியபோது கூறியதாவது:
“எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளம் ஆகும். நான் ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது என் தந்தை பிழைப்பு தேடி மும்பை வந்து 20 ஆண்டுகளாக வெறும் 5 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்து வந்தார். அவர் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்திருந்ததால், குஜராத்தை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து முதலில் கெமிக்கல்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார்.
இரண்டு ஆண்டுகள் அத்தொழில் செய்துவிட்டு அதே குஜராத்தி பிரமுகருடன் இணைந்து அபூர்வா கெமிக்கல் என்ற பெயரில் கெமிக்கல் தொழிற்சாலையைத் தொடங்கினார். நான் கல்லூரி படிப்பை படித்துக்கொண்டே எனது தந்தையின் கெமிக்கல் தொழிற்சாலையிலும் வேலை செய்தேன். 1989-ம் ஆண்டு நான் எம்.பி.ஏ முடித்தபோது வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எனது தந்தைக்கு என்னை வெளிநாடு அனுப்ப விருப்பம் இல்லை. ஆனால், எனது தாயாரின் ஆதரவு இருந்ததால், நான் வேலை தேடி வெளிநாடு சென்றுவிட்டேன்.
அப்பாவுக்கு தெரியாமல் கம்பெனி ஆரம்பித்தேன்!
வெளிநாட்டில் ஆறு ஆண்டுகள் பணியாற்றி விட்டு, இந்தியா வந்தபோது மீண்டும் வெளிநாடு போகவேண்டாம் என்று எனது தந்தை என்னிடம் கேட்டுக்கொண்டார். அதோடு, அபூர்வா கெமிக்கலில் தன்னுடன் சேர்ந்து நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும்படி கூறினார்.
நானும் தந்தை சொல்லைத் தட்ட முடியாமல் அபூர்வா கெமிக்கல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். அங்கு தொழிலை நன்றாக கற்றுக்கொண்டு, நானே 2001ம் ஆண்டு எனது மகள் யாமினி பெயரில் யாமினி கெமிக்கல் என்ற தொழிற்சாலையைத் தொடங்கினேன். வெளிநாட்டில் சம்பாதித்த பணம் மற்றும் என்னிடம் ஏற்கனவே இருந்ததை கொண்டு ரூ.17 லட்சத்தில் இந்தத் தொழிற்சாலையைத் தொடங்கினேன். எனது தந்தையின் அபூர்வா கெமிக்கல் தொழிற்சாலையில் பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு மாலையில் எனது யாமினி கெமிக்கல் தொழிற்சாலையில் சென்று வேலை செய்வேன்.
2004-ம் ஆண்டு எனது இரண்டாவது மகள் நித்தியஸ்ரீ பெயரில் மேலும் ஒரு கெமிக்கல் தொழிற்சாலையைத் தொடங்கினேன். தினமும் மூன்று தொழிற்சாலைகளிலும் 15 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைத்தேன். இரண்டு தொழிற்சாலைகளைத் தொடங்கியதால் 2001-ம் ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு வரை தொழிற்சாலைகளை நடத்த மிகவும் சிரமப்பட்டேன். நிதி நெருக்கடி அதிகமாக இருந்தது. எனது நண்பர்கள்தான் எனக்கு நெருக்கடியான நேரத்தில் கைகொடுத்து என்னைத் தூக்கிவிட்டனர்.
கடன் கிடைக்காததால் கலங்கிப் போனேன்…
எனது தந்தை பங்குதாரராக இருந்த அபூர்வா கெமிக்கல் பங்குதாரர் அந்தத் தொழிற்சாலையில் அவருக்கு இருந்த பங்குகளை விற்கப் போவதாக அறிவித்தார். அந்தப் பங்குகளை வாங்கும்படி எனது தந்தையிடம் சொன்னதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டார். அந்தத் தொழிற்சாலையை வாங்குவதற்காக பல இடங்களில் பணத்திற்கு முயற்சி செய்து பார்த்தேன். வங்கியில் கடன் கேட்டதற்குக் கொடுக்க மறுத்துவிட்டனர். எப்படி கம்பெனியை வாங்குவது என்று தெரியாமல் தவித்தேன். வீட்டுக்கு வந்து மனமுடைந்து அழுதேவிட்டேன். அதைப் பார்த்து கலங்கிப் போன என் அப்பா, எங்களது கம்பெனியில் தயாரிக்கப்படும் கெமிக்கல்களை மொத்தமாக வாங்கிக்கொள்ளும் தொழிலதிபர் ராகேஷ் பக்ஷியிடம் விஷயத்தை சொன்னார். அவர் உடனே வந்து வங்கியில் கடன் கிடைக்க எனக்கு உதவி செய்தார். வங்கியில் நான் வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் கொடுத்து கடன் கிடைக்க உதவி செய்தார். அந்த நிதியை கொண்டு அபூர்வா கெமிக்கல் தொழிற்சாலையை 2006ம் ஆண்டு முழுவதுமாக எங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தேன்.
ஆனால் இத்தொழிற்சாலையை வாங்கியவுடன் எனது போட்டியாளர்கள் எனக்கு கடுமையான நெருக்கடிகளை கொடுத்தனர். அவற்றை சமாளித்து இத்தொழிற்சாலைகளை நடத்தினோம். எங்களது தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மெட்டாலிக் சால்ட் எனப்படும் உலோக உப்புக்கள் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, சீனாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மத்திய அரசின் கொள்கையால் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவது கடந்த சில மாதங்களாக மந்தமாக இருக்கிறது.
ஆண்டு டேர்ன் ஓவர் ரூ.100 கோடி
2012-ம் ஆண்டு புதிதாக சபிதா கெமிக்கல் என்ற மேலும் ஒரு தொழிற்சாலையை தொடங்கியுள்ளோம். நான்கு தொழிற்சாலைகளும், தானே மாவட்டம் பத்லாப்பூர் தொழிற்பேட்டைக்குள் இருக்கிறது. இந்தத் தொழிற்சாலையில் 10 வகையான கெமிக்கல்களைத் தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்புவதோடு, உள்நாட்டு தேவைகளுக்கும் சப்ளை செய்கிறோம்.
ஆரம்பத்தில் நான் 1984-ம் ஆண்டு 12-வது வகுப்பு முடித்தவுடன் முதல்முறையாக மாதம் 1200 ரூபாயிக்கு வேலைக்கு சேர்ந்தேன். ஆனால், இன்று எனது தந்தையின் வழிகாட்டுதலில் கெமிக்கல் வர்த்தகத்தில் நான்கு கம்பெனிகளிலும் சேர்த்து ஆண்டுக்கு 100 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெறுகிறது. நான்கு கம்பெனிகள் இருந்தாலும், எனது தந்தை ஆரம்பித்த அபூர்வா கெமிக்கல்ஸ் நிறுவனம்தான் எனது தாய் நிறுவனமாக இருக்கிறது.
மகள்கள் படிப்பதால் நானே நான்கு கம்பெனிகளையும் கவனிக்கவேண்டியிருக்கிறது. எனவே இருக்கின்ற கம்பெனிகளை அப்படியே தொடர்ந்து சிறப்புடன் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். புதிதாக 2020-ம் ஆண்டிலிருந்து ஓம்கார் ஸ்பெலாலிட்டி நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறேன். இது தவிர, வேறு சில நிறுவனங்கள் என மொத்தம் 11 நிறுவனங்களில் கவுரவப் பொறுப்புக்களில் இருக்கிறேன். எந்த ஒரு தொழிலிலும் வெற்றி பெற வேண்டுமானால் நம்பிக்கையான தொழிலாளர்கள், கடின உழைப்பு மிகவும் அவசியம்’’ என்று தனது பிசினஸ் பயணத்தை நச்சென்று சொல்லி முடித்தார் சக்தி ஆர்.கண்ணன்.
ஆண்டுக்கு ரூ.100 கோடி வர்த்தகம் செய்தாலும் தினமும் தனது கம்பெனிக்கு மும்பை பாண்டூப் பகுதியில் இருந்து தனது கம்பெனி இருக்கும் பத்லாப்பூருக்கு புறநகர் ரயில்களில் வருவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்.