காங்கயம்: காங்கயம் அருகே சாலையோரத்தில் உள்ள பட்டுப்போன மரத்தால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. அதனை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம்- தாராபுரம் சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான டூவீலர், கார்கள், கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் என எராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் காங்கயம்-தாராபுரம் சாலை, நாகரசு நல்லூர் பிரிவு அருகே சாலையோரத்தில் உள்ள ஒரு பட்டுப்போன மரம் காய்ந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மரத்தை வெட்டி, அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.