ஊட்டி: ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இச்சமயங்களில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையிலும், மகிழ்விக்கும் வகையிலும் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டு மலர்கள் பூத்துக் குலுங்கும். குறிப்பாக, ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள்.
இது தவிர இரண்டாம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும் பூங்காக்கள் தயார் செய்யப்படும். இச்சமயங்களில் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை என்றாலும், பூங்கா முழுவதிலும் மலர்கள் பூக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வழக்கம் போல், ஊட்டி தாவரவியல் பூங்காவில் இம்முறையும் இரண்டாவது சீசனுக்காக பூங்கா தயார் செய்யபட்டுள்ளது. பூங்கா முழுவதிலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் வண்ண மலர்கள் பூத்துக் காணப்படுகிறது. அதேபோல், 15 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் பூத்துள்ளன. இந்த மலர் தொட்டிகளை கொண்டு மாடங்களில் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்து செல்கின்றனர்.
ஆனால், இம்முறை கடந்த ஜூன் மாதம் துவங்கிய மழை ஆகஸ்ட் மாதம் இறுதி வரை பெய்த நிலையில், ஊட்டி ரோஜா பூங்காவில் அனைத்து மலர் செடிகளிலும் இருந்த மலர்கள் உதிர்ந்தன. மேலும், இரண்டாம் சீசனுக்காக பூங்காவை தயார் செய்த போதிலும் பெரும்பாலான செடிகளில் மலர்கள் இன்றி காணப்படுகிறது. ஆங்காங்கே ஒரு சில செடிகளில் மட்டுமே ஒரு சில மலர்கள் காணப்படுகிறது. ரோஜா மலர்களை காண ஆர்வமுடன் ரோஜா பூங்காவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள், அங்கு மலர்கள் இல்லாத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.